உளறி கொட்டும் அமைச்சர்கள் பதவி பறிக்க மேலிடம் திட்டம்

பெங்களூரு: வாய்க்கு வந்தபடி உளறி கொட்டும் அமைச்சர்களின் பதவியை பறிக்க, காங்கிரஸ் மேலிடம் ஆலோசிக்கிறது.

கர்நாடக காங்கிரஸ் அரசில், சமீப நாட்களாக முதல்வர் மாற்றம் குறித்து பேசப்படுகிறது. குறிப்பாக அமைச்சர்கள் வாயை திறந்தால், முதல்வர் மாற்றம் பற்றியே பேசுகின்றனர். இவ்விஷயத்தில் மற்றவருக்கு புத்தி சொல்ல வேண்டிய அமைச்சர்களே, இது போன்று நடந்து கொள்வதால், காங்கிரஸ் மேலிடம் எரிச்சல் அடைந்துள்ளது.

'முதல்வர் மாற்றம் குறித்து யாரும் பேச வேண்டாம். முதல்வரை மாற்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டால், நாங்கள் முடிவு செய்வோம். நீங்கள் பகிரங்கமாக பேசி, எதிர்க்கட்சியினர் வாய்க்கு அவல் ஆகாதீர்கள்' என மேலிடம் அறிவுறுத்தியது.

ஆனாலும், ராஜண்ணா உட்பட சில அமைச்சர்கள் வாயை மூடியதாக தெரியவில்லை. தங்கள் பேச்சுகளால் பா.ஜ., - ம.ஜ.த.,வினருக்கு அஸ்திரத்தை கொடுக்கின்றனர். எத்தனை முறை எச்சரித்தும் அமைச்சர்கள், தங்கள் போக்கை மாற்றிக் கொள்ளவில்லை. இவர்களுக்கு பாடம் புகட்ட, காங்., மேலிடம் ஆலோசிக்கிறது.

சில நாட்களுக்கு முன், முதல்வரும், துணை முதல்வரும் டில்லி சென்றிருந்த போது, கட்சிக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தும் வகையில் பேசும் அமைச்சர்களை நீக்கிவிட்டு, உற்சாகமாக பணியாற்றும் இளைஞர்களை பதவியில் அமர்த்துவது குறித்து யோசிக்கும்படி மேலிடம் உத்தரவிட்டது.

இதற்கு சிவகுமார் சம்மதித்துள்ளார். குறிப்பிட்ட சிலரை அமைச்சரவையில் இருந்து நீக்கும்படி கூறுகிறார். ஆனால், தனக்கு ஆதரவாக நிற்கும் அமைச்சர்களை நீக்க, முதல்வர் சித்தராமையா மறுக்கிறார்.

இவ்விஷயத்தில் இருவருக்கும், இடையே பனிப்போர் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இறுதியில் மேலிடம் என்ன முடிவு எடுக்கும் என்ற, 'சஸ்பென்ஸ்' நீடிக்கிறது.

Advertisement