மனைவியை கொன்று கணவர் தலைமறைவு

ஹாசன் : மனைவியை கொலை செய்து, துாக்கில் தொங்க விட்டு தப்பியோடிய கணவரை போலீசார் தேடி வருகின்றனர்.

ஹாசன் மாவட்டம், சென்னராயபட்டணா தாலுகாவின் அங்கனஹள்ளி கிராமத்தில் வசிப்பவர் ஆனந்த். இவரது மனைவி சந்திரகலா, 27. இவர்களின் திருமணத்தின் போது, வரதட்சணையாக தங்க நகைகள், ரொக்கப்பணம் வழங்கப்பட்டது.

திருமணத்திற்கு பின், மேலும் வரதட்சணை கொண்டு வரும்படி மனைவியை துன்புறுத்தி வந்தார்.

ஆனந்த் பல இடங்களில் லட்சக்கணக்கான ரூபாய் கடன் வாங்கியிருந்தார். கடன்காரர்கள் நெருக்கடி கொடுத்தனர். எனவே மனைவி வீட்டில் இருந்து வரதட்சணை வாங்கி வந்து, கடனை அடைக்க நினைத்தார்.

மனைவியை தாய் வீட்டுக்கு சென்று பணம் வாங்கி வரும்படி கூறினார். இதற்கு மனைவி சம்மதிக்காததால், தம்பதி இடையே மனஸ்தாபம் ஏற்பட்டது.

ஆனந்த், மனைவியை கழுத்தை நெரித்து கொலை செய்து, துாக்கில் தொங்கவிட்டு தப்பியோடினார். அங்கு வந்த சந்திரகலாவின் பெற்றோர், ஆனந்தை கண்டுபிடித்து தண்டிக்கும்படி, போராட்டம் நடத்தினர்.

சென்னராயபட்டணா போலீசார், அங்கு சென்று உடலை மீட்டனர். ஆனந்தை தேடி வருகின்றனர்.

Advertisement