மணமான 2 நாளில் 17 வயது சிறுமி பலி போக்சோ சட்டத்தில் கணவன் கைது


புன்செய்புளியம்பட்டி: புன்செய்புளியம்பட்டி அருகே திருமணமான இரு நாளில் சிறுமி இறந்த நிலையில், போக்சோ சட்டத்தில் கணவரை கைது செய்த போலீசார், சிறையில் அடைத்தனர்.


ஈரோடு மாவட்டம் புன்செய்புளியம்பட்டி அருகே வெங்கநாயக்கன்பாளையத்தை சேர்ந்த ரங்கன் - கலாமணி தம்பதியின், 17 வயது மகள் எட்டாம் வகுப்பு படித்துவிட்டு, விவசாய கூலி வேலைக்கு சென்று வந்தார். இவரது உறவுக்கார வாலிபரான பவானிசாகரை அடுத்த தாண்டாம்பாளையத்தை சேர்ந்த கூலி தொழிலாளி சக்திவேல், 31; இருவருக்கும் கடந்த, 15ம் தேதி திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில், 16ம் தேதி வயிறு வலிப்பதாக சிறுமி தனது தாயிடம் கூறியுள்ளார். சத்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். சிகிச்சை பெற்று வந்த நிலையில், 17ம் தேதி சிறுமி இறந்தார். அவரது தாய் கலாமணி புன்செய்புளியம்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் புகாரளித்ததை தொடர்ந்து, போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.


இதுகுறித்து போலீசார் கூறியதாவது: திருமணம் நடந்த இரண்டு நாளில் சிறுமிக்கு வயிற்று வலி ஏற்பட்டதால், குடும்பத்தினர் மாத்திரை வாங்கி கொடுத்துள்ளனர். ரத்தப்போக்கு அதிகமான நிலையில், கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இறந்தது தெரிய வந்தது. சிறுமியின் தாய் புகாரின்படி
சக்திவேல் மீது, குழந்தை திருமண தடுப்பு சட்டம் மற்றும் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிந்து கைது செய்தோம். சத்தி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சத்தி கிளை சிறையில் நேற்று அடைக்கப்பட்டார்.

இவ்வாறு கூறினார்.

Advertisement