ஐக்கிய அரபு எமிரேட்சில் மேலும் ஒரு கேரள பெண் சடலமாக மீட்பு; வரதட்சணை கொடுமையால் விபரீதம் என புகார்

5


அபுதாபி: ஐக்கிய அரபு எமிரேட்சில் கேரள பெண் ஒருவர் வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


கேரளாவின் கொல்லம் பகுதியைச் சேர்ந்த ராஜசேகரன் பிள்ளை மற்றும் துளசிபாய் தம்பதியின் மகள் அதுல்யா,29. இவருக்கு சதீஷ் என்பவரை திருமணம் செய்து வைத்துள்ளனர். இருவரும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வசித்து வந்தனர். இந்நிலையில், கடந்த 19ம் தேதி அதுல்யா தனது வீட்டில் சடலமாக கிடந்துள்ளார். இது குறித்து அவரது தாயார் அளித்த புகாரின் பேரில் கேரள போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


அந்தப் புகார் மனுவில்; கடந்த 2014ம் ஆண்டு முதல் வரதட்சணை கேட்டு என் மகளை துன்புறுத்தி வந்துள்ளார். ஒரு பைக்கும், 43 சவரன் நகைகளும் கொடுத்துள்ளோம். கூடுதலாக வரதட்சணை கேட்டு என் மகளை அவரது கணவன் சதீஷ் அடித்து கொடுமைப்படுத்தியுள்ளார். என் மகளின் குரல்வளையை நெறித்து, வயிற்றில் எட்டி உதைத்து துன்புறுத்தியுள்ளார். சாப்பிடும் தட்டால் தலையை தாக்கியதில் அவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் கடந்த 18 மற்றும் 19ம் தேதிகளில் நடந்துள்ளது, எனக் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அதுல்யாவின் தந்தை ராஜசேகரன் பிள்ளை கூறுகையில், " சதீஷ் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி இருந்தார். தினமும் குடித்து விட்டு என் மகளை துன்புறுத்தி வந்துள்ளார். ஒருமுறை என் மகளை அடித்த போது, கணவனிடம் இருந்து பிரிந்து அழைத்து வந்து விட்டோம். அதன்பிறகு, சதீஷ் தேடிவந்து மன்னிப்பு கேட்டதால், மீண்டும் அனுப்பி வைத்தோம்," என்றார். இதனிடையே, தன் மீதான குற்றச்சாட்டுக்கு சதீஷ் மறுப்பு தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே,ஷார்ஜாவில் கேரளாவைச் சேர்ந்த விபன்ஜிகா,32, என்பவர் மகளுடன் வீட்டில் சடலமாக மீட்கப்பட்டார். வரதட்சணை கேட்டு கணவர் கொடுமைப்படுத்தியதாக போலீசாரிடம் அவரது பெற்றோர் புகார் அளித்திருந்தனர்.

ஐக்கிய அரபு எமிரேட்சில் கேரளாவைச் சேர்ந்த பெண்கள் அடுத்தடுத்து சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் கேரளாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement