பார்லிமென்ட் மழைக்கால கூட்டத்தொடர்; எதிர்க்கட்சிகள் கடும் அமளி; லோக்சபா ஒத்திவைப்பு

35


புதுடில்லி: பார்லிமென்ட் மழைக்கால கூட்டத்தொடர் இன்று (ஜூலை 21) காலை 11 மணிக்கு தொடங்கியது. எதிர்க்கட்சிகள் அமளி காரணமாக, லோக்சபாவை மாலை 4 மணி வரை சபாநாயகர் ஓம் பிர்லா ஒத்திவைத்தார்.


பார்லிமென்டின் மழைக்கால கூட்டத் தொடர் இன்று (ஜூலை 21) தொடங்கியது. வரும் ஆகஸ்ட் 21ம் தேதி வரை கூட்டத்தொடர் நடைபெறுகிறது. கூட்டத்தொடரில் பல முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற, மத்தியில் ஆளும் பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு திட்டமிட்டுள்ளது. அதேபோல், முக்கிய பிரச்னைகளை எழுப்ப எதிர்க்கட்சிகளும் திட்டமிட்டுள்ளன.


லோக்சபா கூடியது எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டனர். லோக்சபா சபாநாயகர் ஓம்பிர்லா பல முறை எச்சரித்தும், எதிர்க்கட்சியினர் தொடர்ந்து கூச்சலிட்டனர். இதனால், லோக்சபாவை மாலை 4 மணி வரை சபாநாயகர் ஓம் பிர்லா ஒத்திவைத்தார்.

ராஜ்யசபா



அதேநேரத்தில், ராஜ்யசபா காலை 11 மணி தொடங்கி நடந்து வருகிறது. அவையை ராஜ்யசபா தலைவரும், துணை ஜனாதிபதியுமான ஜக்தீப் தன்கர் நடத்தி வருகிறார். அவை தொடங்கியதும் சிறிது நேரம் எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர்.


பார்லிமென்ட் மழைக்கால கூட்டத்தொடரை சுமுகமாக நடத்துவதற்காக, மத்திய அரசு சார்பில் அனைத்துக் கட்சி கூட்டம் நேற்று நடந்தது. பா.ஜ.,வைச் சேர்ந்த ராஜ்யசபா சபை முன்னவர் நட்டா தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில், பல்வேறு கட்சிகளை சேர்ந்த தலைவர்கள், மத்திய அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.



அலகாபாத் உயர்நீதிமற்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் பண மூட்டை சிக்கிய விவகாரத்தில், அவரை பதவி நீக்கம் செய்வது தொடர்பான தீர்மானம் இந்தக் கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


ஆபரேஷன் சிந்துார் உட்பட பல பிரச்னைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் தயாராகி வரும் சூழலில், மழைக்கால கூட்டத்தொடரின், முதல் நாளிலேயே இன்று புதிய வருமான வரி மசோதா தொடர்பான பார்லிமென்ட் குழுவின் அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது.

Advertisement