மும்பை ரயில் குண்டுவெடிப்பு வழக்கு; 19 ஆண்டுகளுக்கு பிறகு குற்றவாளிகள் 12 பேரை விடுவித்தது நீதிமன்றம்

7

மும்பை: மும்பை ரயில் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றவாளிகள் 12 பேரை விடுவித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கில், சம்பவம் நடந்து 19 ஆண்டுகளுக்கு பிறகு நீதிமன்றம் குற்றவாளிகளுக்கு அளித்த தண்டனையை ரத்து செய்துள்ளது.


கடந்த 2006ம் ஆண்டு ஜூலை 11ம் தேதி மும்பையின் புறநகரில் உள்ள 7 ரயில்களில் வெடிகுண்டுகள் வெடித்தன. இதில் 188 பேர் கொல்லப்பட்டனர். 700க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் பிரஷர் குக்கரில் வெடிகுண்டுகள் வைத்து வெடிக்கச் செய்தது தெரிய வந்தது.

இவ்வழக்கு தொடர்பாக 13 பேர் கைது செய்யப்பட்டனர். 9 ஆண்டுகளாக விசாரணை நடைபெற்று வந்தது. 192 பேர் சாட்சிகளாக சேர்க்கப்பட்டு, இவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. குற்றம்சாட்டப்பட்ட 13 பேரில் 12 பேர் குற்றவாளிகள் என கோர்ட் தீர்ப்பளித்தது.

கடந்த 2015ம் ஆண்டு, இதில் 5 பேருக்கு மரண தண்டனையும், ஏழு பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்தது.


இந்த தீர்ப்பிற்கு பிறகு, மஹா., அரசு குற்றவாளிகளின் மரண தண்டனை உறுதி செய்ய கோரி, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அதே நேரத்தில், தண்டனையை எதிர்த்து நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து இருந்தனர். இந்த வழக்கு தொடர்பாக, நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது.


இந்நிலையில் இன்று (ஜூலை 21) 12 பேர் மீதான தண்டனையை ரத்து செய்து, மும்பை ஐகோர்ட் உத்தரவிட்டது. ''அவர்களுக்கு எதிரான வழக்கை நிரூபிக்க அரசு தரப்பு முற்றிலும் தோல்வி அடைந்து விட்டது'' என நீதிபதிகள் தீர்ப்பில் கூறியுள்ளனர். தீர்ப்பை கேட்ட குற்றவாளிகள் தங்களது வழக்கறிஞர்களுக்கு நன்றி தெரிவித்து கொண்டனர்.


சம்பவம் நடந்த 19 ஆண்டுகளுக்கு பிறகு குற்றவாளிகள் 12 பேரை நீதிமன்றம் விடுவித்து தீர்ப்பு அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement