துாய்மை நகரங்கள் பட்டியலில் தமிழகம் பின்னடைவுக்கு கண்டனம்

சென்னை: துாய்மை நகரங்கள் பட்டியலில், தமிழகம் கடும் பின்னடைவை சந்தித்துள்ளதால், தி.மு.க., அரசுக்கு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

அவர்கள் அறிக்கை:



நயினார் நாகேந்திரன்: மத்திய அரசு வெளியிட்ட, துாய்மை நகரங்கள் பட்டியலில், தமிழக தலைநகர் சென்னை, 38வது இடத்தையும், மதுரை 40வது இடத்தையும் பெற்றிருப்பது கவலை அளிக்கிறது. தமிழகத்தின் ஒரு நகரம் கூட, முதல் பத்து இடங்களுக்குள் வரவில்லை. பெருகி வரும் குற்றங்களை தான், தி.மு.க., அரசால் கட்டுப்படுத்த முடியாது என்றால், பெருகி வரும் குப்பைகளை கூட தடுக்க இயலாதா.

ஒவ்வொரு ஆண்டும் துாய்மைப் பணிகளுக்காக, பல்லாயிரக்கணக்கான கோடிகளை செலவிடுவதாக, தி.மு.க., அரசு காட்டிய கணக்குகள் எல்லாம் என்ன ஆனது. தரம் குன்றி வரும் அரசு மருத்துவமனைகள்; குப்பைகளின் கூடாரமாகி வரும் மாநகரங்கள்; பராமரிப்பு என்ற பெயரில் நடக்கும், ஊழல் முறைகேடுகள்; என, தி.மு.க., அரசின் திறனற்ற நிர்வாகத்தால், நோய்களின் தொட்டிலாக, தமிழகம் மாறிவருவது கொடுமையானது.

பன்னீர்செல்வம்:



மழை நீர் வடிகால், பாதாள சாக்கடை, குடிநீர் குழாய் போன்ற பணிகள், ஆமை வேகத்தில் நடப்பதால், சாலைப் பணிகள் நடக்கவில்லை. சென்னையில் புதிய தார் சாலை அமைக்க, மேற்பரப்புகள் அகற்றப்பட்டு, பல நாட்களாகியும் சாலை போடப்படவில்லை. இதனால், வாகனங்களில் செல்வோர், கடும் அவதிக்கு உள்ளாகின்றனர்.

சாலைப் பணிகள் இந்த லட்சணம் என்றால், துாய்மைப் பணி அதை விட மோசமான நிலையில் உள்ளது. இந்தியாவில் துாய்மையான 95 நகரங்களில், சென்னை 38, மதுரை 40, திருச்சி 49, கோவை 28 வது இடத்தில் உள்ளன. நகரங்களை துாய்மையாக வைத்துக் கொள்ள இயலாத; சாலைகளை அலங்கோலமாக வைத்திருக்கும் தி.மு.க., அரசின் செயலற்ற தன்மை கண்டனத்துக்கு உரியது.

இவ்வாறு, அவர்கள் கூறியுள்ளனர்.

Advertisement