அரசியல் பிரச்னைகளில் அமலாக்கத்துறையை பயன்படுத்தக் கூடாது: சுப்ரீம் கோர்ட் கண்டிப்பு

33

புதுடில்லி: அரசியல் பிரச்னைகளில் அமலாக்கத்துறை ஏன் பயன்படுத்தப்படுகிறது என்று சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் கேள்வி எழுப்பி உள்ளார்.

கர்நாடகா முதல்வர் சித்தராமையா தொடர்புடைய 'மூடா' எனப்படும் மைசூர் நகர்ப்புற மேம்பாட்டு ஆணைய ஊழல் வழக்கில் இதுவரை ரூ.400 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கி உள்ளது.

இந்த வழக்கில் கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு வழங்கிய சம்மன்களை கர்நாடக உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.

இந்த உத்தரவை எதிர்த்து அமலாக்கத்துறை சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது.

அமலாக்கத்துறை தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு இன்று தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் , வினோத் சந்திரன் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

இந்த விசாரணையின்போது, கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.வி.ராஜுவிடம், 'தயவு செய்து எங்களை வாய் திறக்க வைக்காதீர்கள், ஏனென்றால் அமலாக்கத்துறை பற்றி சில கடுமையான கருத்துக்களை கூற வேண்டிய கட்டாயம் ஏற்படும். எங்களுக்கு மஹாராஷ்டிராவில் சில அனுபவம் கிடைத்துள்ளது.

ஆகையால், நாடு முழுவதும் நடைபெறும் அரசியல் பிரச்னைகளுக்கு அமலாக்கத்துறையை பயன்படுத்துவதை நிறுத்துங்கள். அரசியல் பிரச்னைகளை தேர்தல் களத்திலேயே கடைபிடியுங்கள், அமலாக்கத்துறையை பயன்படுத்தாதீர்கள்' என்று கூறி, முதல்வர் சித்தராமையாவின் மனைவிக்கு எதிரான அமலாக்கத்துறையின் மேல் முறையீட்டு மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.

Advertisement