மயிலாடுதுறை டி.எஸ்.பி., சஸ்பெண்ட் எதிரொலி; களைகட்டியது கள்ளச்சந்தை மது விற்பனை!

15


மயிலாடுதுறை: மயிலாடுதுறை மதுவிலக்கு பிரிவு டி.எஸ்.பி., சுந்தரேசன் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில், கள்ளச்சந்தை மது விற்பனை களைகட்டியது. காலை 6 மணி முதல் டாஸ்மாக் கடை அருகில் திறந்த வெளியில் மதுபானம் விற்கும் வீடியோ வெளியாகி உள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை மதுவிலக்கு பிரிவு டி.எஸ்.பி., சுந்தரேசன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இவர் கடந்த நவம்பர் மாதம் மயிலாடுதுறை டி.எஸ்.பி.,யாக பதவி ஏற்றதில் இருந்து சட்டவிரோதமாக செயல்பட்ட 23 பார்களை பூட்டி சீல் வைத்தார்.



இது சட்டவிரோத மதுபான விற்பனையாளர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்த சூழலில், தன் வாகனம் பறிக்கப்பட்டது தொடர்பாக சுந்தரேசன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.


உளவுத்துறை ஐ.ஜி., செந்தில்வேல், சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் ஆகியோர் வற்புறுத்தலின் பேரில் தான் பழிவாங்கப்படுவதாக இவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். இதையடுத்து, டி.எஸ்.பி., சுந்தரேசனை தமிழக அரசு சஸ்பெண்ட் செய்தது.



இவர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட அடுத்த நாளில் இருந்து மயிலாடுதுறை பகுதியில் சட்டவிரோதப் பார்கள் திறக்கப்பட்டு விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சித்தர்காடு பகுதியில் உள்ள காவிரிக்கரை அருகில் செயல்படும் டாஸ்மாக் கடையில் பொது வெளியில் அட்டைப்பட்டியில் வைத்துக் கொண்டு மது விற்பனை வெளிப்படையாக நடந்து வருகிறது. பணம் வசூல் செய்வதற்கு வசதியாக, 'க்யூஆர்' கோடு கூட வைத்திருக்கின்றனர்.

திறந்த வெளியில் மதுபானம் விற்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Advertisement