பார்லிமென்டில் பேச அனுமதிக்கவில்லை; முதல்நாளே ராகுல் குற்றச்சாட்டு

17


புதுடில்லி:''பாதுகாப்பு துறை அமைச்சரை பேச அனுமதிக்கிறார்கள். பார்லிமென்டில் பேச என்னை அனுமதிக்கவில்லை'' என காங்கிரஸ் எம்.பி.,யும், லோக்சபா எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் குற்றம் சாட்டி உள்ளார்.


பார்லிமென்டின் மழைக்கால கூட்டத் தொடர் இன்று (ஜூலை 21) தொடங்கியது. வரும் ஆகஸ்ட் 21ம் தேதி வரை கூட்டத்தொடர் நடைபெறுகிறது. கூட்டத்தொடர் காலை 11 மணிக்கு தொடங்கியது. எதிர்க்கட்சிகள் அமளி காரணமாக, முதல் நாளிலே லோக்சபாவை சபாநாயகர் ஓம்பிர்லா ஒத்திவைத்தார்.

இது குறித்து, பார்லி., வளாகத்தில் நிருபர்களுக்கு ராகுல் அளித்த பேட்டி:
பாதுகாப்பு துறை அமைச்சரை பேச அனுமதிக்கிறார்கள். பார்லிமென்டில் பேச என்னை அனுமதிக்க வில்லை. எதிர்க்கட்சி எம்.பி.,க்களுக்கு பார்லி.,யில் பேச அனுமதி மறுக்கப்படுகிறது.



பா.ஜ., கூட்டணி கட்சி எம்.பி.களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படுகிறது. எதிர்க்கட்சி தலைவராக என்னை பேச அனுமதி அளிக்க வேண்டும். இது ஒரு புதிய அணுகுமுறை. அரசு தரப்பில் உள்ளவர்கள் பேச முடிந்தால், எங்களுக்கும் பேச இடம் கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


காங்கிரஸ் எம்.பி., பிரியங்கா கூறியதாவது: ஆளுங்கட்சியினர் விவாதத்திற்குத் தயாராக இருந்தால், எதிர்க்கட்சித் தலைவரைப் பேச அனுமதிக்க வேண்டும். அவர் பேச எழுந்து நின்றார். ஆனால் அவருக்கு பேச அனுமதி மறுக்கப்பட்டது. அவர் பேச அனுமதிக்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement