சீர்மரபினர் நலவாரிய அடையாள அட்டை வழங்க கோரிக்கை

கமுதி: ராமநாதபுரம் மாவட்டத்தில் தமிழ்நாடு சீர்மரபினர் நல வாரியம் அடையாள அட்டை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி சார்பில் கோரிக்கை விடுத்தனர். மாநில இளைஞரணி அமைப்புச் செயலாளர் சப்பாணிமுருகன் கூறியதாவது:

சீர் மரபினார் வகுப்பைச் சேர்ந்தவர்கள் சமூக, பொருளாதார, கல்வி மேம்பாட்டுக்காக அமைக்கப்பட்டுள்ள சீர்மரபினர் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள உறுப்பினர்களுக்கும், அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு தொழிலாளர் நலத்துறை கட்டுப்பாட்டில் இயங்கி வரும் நல வாரியங்கள், பிற்படுத்தப்பட்ட நலத்துறை மூலம் வழங்கப்பட்டு வரும் நலத்திட்டங்கள், விபத்து நிவாரணம், உயர்கல்வி, திருமணம், மகப்பேறு உதவித்தொகை, மருத்துவ உதவி, முதியோர் ஓய்வூதியம், தொழில் கடனுதவி வழங்கப்படுகின்றன.

இந்த உதவிகளை பெற தமிழ்நாடு சீர்மரபினர் நலவாரிய அடையாள அட்டை முக்கியமானதாக உள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் கமுதி தாலுகாவை தவிர்த்து கடலாடி, முதுகுளத்துார், பரமக்குடி, ஆர்.எஸ். மங்கலம், ராமநாதபுரம், கீழக்கரை, ராமேஸ்வரம், திருவாடனை தாலுகாக்களில் பொதுமக்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படவில்லை.

விழிப்புணர்வு இல்லை முதுகுளத்துார், கடலாடி தாலுகாவில் விண்ணப்பங்கள் அளித்தும் கிடப்பில் போடப்பட்டுள்ளது. அரசு சார்பில் வழங்கப்படும் உதவிகளை பெற முடியாமல் சிரமப்படுகின்றனர்.

எனவே உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாமில் சீர்மரபினர் நல வாரியம் உறுப்பினர் அடையாள அட்டை வழங்குவதற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி தனி அலுவலர் அமைத்து விண்ணப்பங்கள் வழங்கி, அடையாள அட்டை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Advertisement