உசிலையில் வி.ஏ.ஓ.,க்கள் உள்ளிருப்பு போராட்டம்

உசிலம்பட்டி: உசிலம்பட்டி ஆர்.டி.ஓ., அலுவலகத்தில், முறைகேடான பணி மாறுதல் உத்தரவை ரத்து செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்கத்தினர் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

உசிலம்பட்டி தாலுகா நாட்டாமங்கலம் வி.ஏ.ஓ., வாக ரஞ்சனி பணியில் இருந்தார். கடந்த ஜனவரி யில் மகப்பேறு விடுப்பு எடுத்துச் சென்றார்.

இப்பணியிடத்தை காலியிடமாக வைத்து இருந்து விடுப்பு முடிந்தபின் அவருக்கே வழங்க வேண்டும், தேவைப் பட்டால் கூடுதல் பொறுப்பாக மட்டுமே வேறு வி.ஏ.ஓ.,வை நியமிக்கலாம் என்பது அரசு விதி.

இந்த நிலையில், ஜூலை 1ல், நடந்த பொதுக்கலந்தாய்விலும், நாட்டாமங்கலத்தை காலிப்பணியிடமாக கொண்டுவராமல் கலந்தாய்வு நடந்துள்ளது. ஜூலை 5ல், கலந்தாய்வில் காலியிடமாக இருந்த வகுரணி கிராம வி.ஏ.ஓ., பணியிடத்தை கஸ்துாரி என்பவர் தேர்வு செய்து உள்ளார்.

அவருக்கு அங்கு பணி ஒதுக்கீடு செய்யாமல் விதிமுறைகளுக்கு புறம்பாக நாட்டாமங்கலத்திற்கு பணி ஒதுக்கீடு செய்து உசிலம்பட்டி ஆர்.டி.ஓ., சண்முகவடிவேல் உத் தரவு வழங்கியுள்ளார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு கிராம நிர்வாக அலு வலர்கள் முன்னேற்ற சங்க மாவட்டத் தலைவர் சுரேஷ், செயலாளர் செல்வ குமார், பொருளாளர் கோபாலகிருஷ்ணன், துணைச் செயலாளர் நவநீதராமன், வட்டாரத் தலைவர் செல்வம் நாட்டாமங்கலம் பணியிடத்தை காலியிடமாக வைத்து, மீண்டும் ரஞ்சனிக்கே வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

சரியான பதில் கிடைக்காததால் நேற்று மாலை 6:00 மணி முதல் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் தரையில் அமர்ந்து உள் ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisement