திருமண வரம் தரும் பார்வதி தேவி

சாம்ராஜ் நகர் மாவட்டத்தின், பார்வதி தேவி கோவில் அமைந்துள்ளது. பெண்களுக்கு திருமணம் வரம், குழந்தையில்லா தம்பதிக்கு, குழந்தை வரம் அளிப்பதில் பெயர் பெற்ற கோவிலாகும். எனவே இங்கு வரும் பெண்களின் எண்ணிக்கை அதிகம்.

சாம்ராஜ்நகர் மாவட்டம், எலந்துாரில் பார்வதி தேவி கோவில் அமைந்துள்ளது. இது 16ம் நுாற்றாண்டில், சோழர்கள் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டது. இங்கு குடி கொண்டுள்ள பார்வதி தேவி, பக்தர்கள் கேட்ட வரங்களை அளிப்பார். திருமணம் ஆகாத இளம் பெண்கள், கோவிலுக்கு வந்து பார்வதி முன்பாக புது சேலை வைத்து வழிபடுவர். அம்பாளுக்கு அபிஷேகம் செய்வர். அதன்பின் அந்த சேலையை திருமணம் ஆகாத கன்னிப்பெண்களுக்கு வழங்க வேண்டும். இப்படி செய்தால் ஆறு மாதங்களுக்குள், திருமணம் கை கூடும். நல்ல வரன் அமையும் என்பது ஐதீகம்.

திருமணமாகி பல ஆண்டுகளாக குழந்தை இல்லாத தம்பதி, இங்கு வந்து தரிசனம் செய்து, பிரார்த்தனை செய்தால் குழந்தை வரம் கிடைக்கும். சொத்து விவாதம், நிலம் உட்பட, வழக்குகளால் அவதிப்படுவோரின் கஷ்டங்களையும், பார்வதி நிவர்த்தி செய்வார். நினைத்த காரியங்கள் நடக்கும்.

கோவிலில் உள்ள பார்வதியின் விக்ரகம் மிகவும் அற்புதமானது. சிறுமி போன்று தரிசனம் அளிக்கிறார். ஒரு முறை கோவிலுக்கு வந்தால், அவ்வப்போது வர வேண்டும் என்ற ஆர்வம் ஏற்படும். கோவிலின் சிறப்பை உணர்ந்து, கர்நாடகா மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும், பக்தர்கள் வருகின்றனர்.

எப்படி செல்வது

பெங்களூரில் இருந்து, 159 கி.மீ., மைசூரில் இருந்து 60 கி.மீ., தொலைவில் எலந்துார் உள்ளது. அனைத்து நகரங்களில் இருந்தும், எலந்துாருக்கு கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ் வசதி உள்ளது. ரயில்களும் இயக்கப்படுகின்றன. தனியார் பஸ்கள், வாடகைக்கார்களும் இயக்கப்படுகின்றன.


தரிசன நேரம்: காலை 7:30 மணி முதல், மாலை 6:00 மணி வரை

- நமது நிருபர் - .

Advertisement