பச்சிளம் குழந்தைகளின் உயிர் காக்கும் தாய்ப்பால் வங்கி

பெங்களூரு: இந்திரா காந்தி குழந்தைகள் மருத்துவமனையில் திறக்கப்பட்ட தாய்ப்பால் வங்கி, பச்சிளம் குழந்தைகளின் உயிர் காக்கிறது.

இது குறித்து, இந்திரா காந்தி குழந்தைகள் மருத்துவமனை அதிகாரிகள் கூறியதாவது:

அரசு சார்ந்த இந்திரா காந்தி மருத்துவமனை, சிறார்களுக்கு தரமான சிகிச்சை அளிப்பதில் பெயர் பெற்றுள்ளது.

மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், சிகிச்சைக்காக இங்கு வருகின்றனர். இதில் பச்சிளம் குழந்தைகளின் எண்ணிக்கையும் அதிகம்.

ஆசரே திட்டம் குழந்தை பிரசவித்த பெண்களுக்கு தாய்ப்பால் சுரக்கவில்லை என்றால், பச்சிளம் குழந்தைகள் பாதிக்கப்படும். குறை பிரசவத்தில் பிறந்த குழந்தைகளுக்கும், தாய்ப்பால் அவசியம்.

இதை மனதில் கொண்டு, இந்திரா காந்தி குழந்தைகள் மருத்துவமனையில், 'ஆசரே' என்ற பெயரில், தாய்ப்பால் வங்கி துவக்கப்பட்டது. இது, பச்சிளம் குழந்தைகளின் உயிரை காப்பாற்றுகிறது.

குழந்தைகளை சிகிச்சைக்காக அழைத்து வரும் தாய்களிடம், தாய்ப்பால் தானம் பெறப்படுகிறது. மருத்துவமனையில் தேவைப்படும் குழந்தைகளுக்கு, டாக்டர்களின் சிபாரிசுப்படி புகட்டப்படுகிறது.

ஒன்றரை ஆண்டுகளாக இந்த வங்கி சிறப்பாக செயல்படுகிறது. இதுவரை 54 லிட்டர் தாய்ப்பால் சேர்ந்தது. நுாற்றுக்கணக்கான குழந்தைகள் பயன் அடைந்தனர்.

தாய்ப்பாலை பம்ப் செய்யும் ஐந்து இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன. இவற்றின் உதவியுடன் தாய்ப்பால் பெறப்படுகிறது.

தினமும் சராசரியாக நான்கைந்து தாய்கள், கூடுதல் பாலை தானம் செய்கின்றனர். இங்கு வரும் தாய்களுடன் பேச்சு நடத்தப்படுகிறது.

தனித்தனி அறைகள் தாய்ப்பாலின் மகத்துவம், இதை தானம் செய்வது, குழந்தைகளின் நலன் குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. டி.வி.,யில் வீடியோ பிரசுரிக்கப்படுகிறது.

தாய்ப்பாலை சேகரிக்க, பாதுகாக்க தனித்தனி அறைகள் உள்ளன. பாலின் தன்மை குறித்து பரிசோதித்த பின், சேகரித்து வைக்கப்படுகிறது. டாக்டரிடம் சிபாரிசு கடிதம் கொண்டு வருவோரின் குழந்தைகளுக்கு தாய்ப்பால் வழங்கப்படுகிறது.

தானம் பெறும் தாய்ப்பாலில் பாக்டீரியாக்களை நீக்கி, பதப்படுத்தி பேக்கிங் செய்து, 120 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் வைக்கப்படுகிறது.

குழந்தைகளுக்கு புகட்டும் போது, சாதாரண வெப்பத்துக்கு கொண்டு வரப்படுகிறது. பால், ஆறு மாதங்கள் வரை கெடாமல் பாதுகாக்கலாம்.

தாய்ப்பால் சேகரிப்பு வங்கி, தினமும் காலை 9:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை செயல்படுகிறது. ஞாயிறு விடுமுறை.

குழந்தைகளுடன் சிகிச்சைக்கு வரும் பெண்கள் மட்டுமின்றி, மற்றவர்களும் தாமாக முன் வந்து, தாய்ப்பால் தானம் செய்ய அனுமதி அளிக்கப்படுகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement