பெங்., ஞானபாரதி வளாகத்தில் பொது மக்கள் நுழைய தடை?

பெங்களூரு: பெங்களூரு பல்கலைக்கழகத்தின், ஞானபாரதி வளாகத்தில் பொது மக்கள் நுழைய தடைவிதிக்க, பல்கலைக்கழக நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து, பெங்களூரு பல்கலைக்கழக நிர்வாகம் வெளியிட்ட அறிக்கை:

பெங்களூரு பல்கலைக்கழக ஞானபாரதி வளாகத்தில், அவ்வப்போது சந்தன மரங்கள் திருட்டு, மாணவர்கள் மீது தாக்குதல் நடத்துவது உட்பட, பல்வேறு குற்றச் சம்பவங்கள் நடக்கின்றன.

அது மட்டுமின்றி இரவோடு இரவாக வளாகத்தில் சுற்றுப்புற மக்கள் குப்பையை கொட்டுகின்றனர். இதனால் சுற்றுச்சூழல் பாழாகிறது. இதுகுறித்து, தொடர்ந்து புகார் வருகிறது.

பல்கலைக்கழக வளாகத்தில் பொது மக்கள் நுழைவதற்கு தடைவிதிக்கும்படி, மாணவர்கள், பேராசிரியர்கள், ஊழியர்கள் வலியுறுத்துகின்றனர். ஆனால் இதற்கு நடைப்பயிற்சியாளர்கள், வளாகத்தின் உட்புற சாலைகளை பயன்படுத்தும் அப்பகுதியினர், எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர்.

எனவே வளாகத்தில் அதிரடியாக பொதுமக்கள் நுழைவுக்கு தடை விதிக்க முடியாது. படிப்படியாக தடையுத்தரவு செயல்படுத்தப்படும். விரைவில் அதிகாரப்பூர்வ உத்தரவு பிறப்பிக்கப்படும்.

இதுகுறித்து, சமீபத்தில் பல்கலைக்கழக சிண்டிகேட் கூட்டம் நடந்தது. முதற்கட்டமாக நாகரபாவியை நோக்கிச் செல்லும் தேசிய சட்டப்பள்ளி நுழைவாசலில் இருந்து, பல்கலைக்கழக நிர்வாக அலுவலகம் வரையிலான காந்திபவன் சாலை வரை, பொது மக்களுக்கு தடை விதிக்க முடிவு செய்யப்பட்டது.

மாணவர்களின் நலனுக்காகவும், குற்றச் சம்பவங்களை கட்டுப்படுத்தவும் பல்கலைக்கழக வளாகத்தில் அனைத்து பகுதிகளிலும் மக்களின் போக்குவரத்துக்கு தடை விதிக்க வேண்டும். ஆனால் இதற்காக அரசு மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement