1.10 லட்சம் சிறாருக்கு ஊட்டச்சத்து குறைபாடு மாநில அரசு ஆய்வில் அதிர்ச்சி தகவல்

பெங்களூரு: கர்நாடகாவில் 1.10 லட்சத்துக்கும் மேற்பட்ட சிறுவர்கள், ஊட்டச்சத்து குறைப்பாட்டால் அவதிப்படுகின்றனர். மாநில அரசு நடத்திய ஆய்வில், இந்த விஷயம் தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து, மகளிர், குழந்தைகள் நலத்துறை அதிகாரிகள் கூறியதாவது:

சிறுவர்களின் ஊட்டச்சத்து குறைப்பாட்டை போக்கும் நோக்கில், மாநல அரசு பள்ளிகளில் சத்தான மதிய உணவு, முட்டை, வாழைப்பழம் வழங்குவது உட்பட, பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. ஆனாலும் சிறுவர்களிடம் ஊட்டச்சத்து பற்றாக்குறை அதிகரிப்பது வருத்தம் அளிக்கிறது.

சிறுவர்களின் ஊட்டச்சத்து தொடர்பாக தெரிந்து கொள்ள, மகளிர், குழந்தைகள் நலத்துறை சார்பில், 2024 - 25ம் ஆண்டில், 31 மாவட்டங்களில் ஆய்வு நடத்தியது.

இதில் 1.10 லட்சம் சிறுவர்கள், ஊட்டச்சத்து குறைபாட்டால் அவதிப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது.

குறிப்பாக விஜயநகரா, ராய்ச்சூர், பீதர், பல்லாரி மாவட்டங்களில் ஊட்டச்சத்து குறைபாடுள்ள சிறுவர்கள், அதிக எண்ணிக்கையில் உள்ளனர்.

விஜயநகரா மாவட்டத்தில், 97,947 சிறுவர்கள் பரிசோதிக்கப்பட்டனர். இவர்களில் 5,413 பேர் சாதாரண ஊட்டச்சத்து குறைபாடு, 1,184 பேர் தீவிரமான ஊட்டச்சத்து குறைபாட்டால் அவதிப்படுகின்றனர்.

பீதரில் 1.13 லட்சம் சிறுவர்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர். இதில் 6,369 சிறுவர்கள் சாதாரணமான, 838 பேர் கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டால் உள்ளனர்.

இதேபோன்று பல மாவட்டங்களில், ஊட்டச்சத்து குறைபாடுள்ள சிறுவர்கள் உள்ளனர்.

சிறுவர்களின் ஊட்டச்சத்து குறைபாட்டை போக்க, மகளிர், குழந்தைகள் நலத்துறை வழிகாட்டு நெறிமுறைகளை பிறப்பித்துள்ளது.

அதிகமான ஊட்டச்சத்து குறைபாடுள்ள சிறுவர்களின் ஆரோக்கியத்தை கண்காணிக்க வேண்டும். வயதுக்கு ஏற்றவாறு சிறுவர்களின் உடல் எடை மற்றும் உயரத்தை பரிசோதிக்க வேண்டும்.

அவர்களை ஊட்டச்சத்தை அதிகரிக்கும் மையங்களுக்கு அனுப்ப வேண்டும். ஊட்டச்சத்து அதிகமாகும் வரை, சிறுவர்களை கண்காணிக்க வேண்டும்.

சிறுவர்களின் வீடுகளில், கழிப்பறை சுத்தமாக உள்ளதா, குடிநீர் சுத்தமாக உள்ளதா என்பதை, ஆய்வு செய்ய வேண்டும். சிறுவர்களின் ஊட்டச்சத்தை அதிகரிக்கும் விஷயத்தில், மகளிர், குழந்தைகள் நலம், கிராம வளர்ச்சி, கல்வி, சுகாதாரத்துறைகள் ஒருங்கிணைந்து செயல்படும்படி, அரசு உத்தரவிட்டுள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement