இளநீரை அம்மனாக பாவித்து வழிபடும் கிராம மக்கள்

சனாதன கலாசாரத்தில் அனைத்தும் தெய்வீகமானது. கற்கள், மரங்களை கடவுளாக பாவித்து மக்கள் சாமி தரிசனம் செய்கின்றனர். பொதுவாக வீடுகளில் சாமி படம், சிலைகளை வைத்து தினமும் பூஜை செய்து வழிபடுவதை பார்த்து இருப்போம். ஆனால் கர்நாடகாவின் சில கிராமங்களில் இளநீரை அம்மனாக பாவித்து வழிபாடு நடத்துகின்றனர். இதை கேட்கும் போது நமக்கு ஆச்சரியமாக இருக்கலாம். ஆனால் அது தான் உண்மை.
கர்நாடகா மக்களால் கன்னட ஆஷாட மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமை வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் அம்மன் கோவில்களில் கூட்டம் அலைமோதும். நீண்ட வரிசையில் காத்து நின்று அம்மனை, பக்தர்கள் தரிசித்து செல்வர்.
மலைநாடு மாவட்டமான சிக்கமகளூரு தாலுகாவில் உள்ள தண்டுமக்கி, பசவனஹள்ளி, கே.ஆர்.பேட்டை மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில், ஆஷாட மாத வெள்ளிக் கிழமைகளில் இளநீரை பூஜை அறையில் வைத்து அம்மனாக பாவித்து, மஞ்சள், குங்குமத்தில் அலங்கரித்து, பூ வைத்து சிறப்பு அலங்காரம் செய்கின்றனர்.
இளநீரின் முன்பு அசைவ உணவு படையல் போட்டு வழிபடுகின்றனர். ஆஷாட மாதத்தின் கடைசி இரண்டு வெள்ளிக்கிழமைகளில் மட்டும் தான், இந்த வித்தியாசமான வழிபாடு நடக்கிறது.
இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், 'இளநீரை அம்மனாக பாவித்து வழிபடும் நடைமுறை, இன்று, நேற்றல்ல. பல ஆண்டுகளாக உள்ளது. எங்கள் முன்னோர்கள் கூட இப்படி தான் வழிபாடு நடத்தினர். இளநீர் தான் எங்களின் அம்மன்.
இந்த முறையில் வழிபாடு செய்பவர்களின், குடும்பத்தில் யாருக்கும் நோய் வராது என்பது, நம்பிக்கையாக உள்ளது. வீட்டில் எந்த சண்டை, சச்சரவும் வராது. திருமண வாழ்க்கை சிறப்பாக அமையும்.
'ஒவ்வொருவருக்கும் அம்மன் நல்ல அதிர்ஷ்டத்தை கொடுப்பார் என்ற ஐதீகம் உள்ளது. வேறு பகுதிகளில் வழிபாடு எப்படி வேண்டும் என்றாலும் இருக்கலாம். ஆனால் எங்கள் வழிபாடு முறை மாறாது' என்றனர்
- நமது நிருபர் - .