100 ரூபாய்க்கு வெள்ளி வாங்கி ரூ.2.28 லட்சம் நகை 'அபேஸ்'

சாம்ராஜ்பேட்: நகைக்கடையில், 100 ரூபாய்க்கு வெள்ளி பொருள் வாங்கிய இருவர், 2.28 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க நகையை திருடிச் சென்றுள்ளார்.

பெங்களூரு, சாம்ராஜ்பேட்டின், ருத்ரப்பா கார்டனில், 'சாமுண்டா ஜுவல்லர்ஸ்' என்ற பெயரில், தங்க நகைக்கடை உள்ளது. 14ம் தேதியன்று, கடையில் உரிமையாளர் இருந்தபோது, இரண்டு நபர்கள் கடைக்கு வந்தனர். 100 ரூபாய் விலையுள்ள சிறிய வெள்ளிப்பொருளை, பேரம் பேசி வாங்கினர்.

இதற்காக 200 ரூபாய் கொடுத்து, 100 ரூபாய் சில்லரை பெற்றனர்.

அதன்பின் 500 ரூபாயை கொடுத்து, சில்லரை தரும்படி கேட்டனர். அப்போது உரிமையாளர் சில்லரை எடுக்க சென்றபோது, அந்நபர்கள் 2.28 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க நகையை திருடி, பாக்கெட்டில் வைத்துக் கொண்டனர். சில்லரையை வாங்கிக் கொண்டு சென்றனர்.

நகைகள் திருடு போனதை, கடை உரிமையாளர் கவனிக்கவில்லை. அதன்பின் நகைகளை சரி பார்த்தபோது, நகைகள் காணாதது தெரியவந்தது.

உடனடியாக கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பார்த்தபோது, 100 ரூபாய்க்கு வெள்ளிப்பொருள் வாங்க வந்த நபர்கள், நகைகளை திருடியது தெரிந்தது.

சாம்ராஜ்பேட் போலீசில் அவர் புகார் அளித்தார். போலீசாரும் சம்பவம் நடந்த நகைக்கடைக்கு வந்து பார்வையிட்டனர். கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து, திருடர்களை கண்டுபிடிக்க முயற்சிக்கின்றனர்.

Advertisement