கோவில் கட்டும் இடத்தை சுட்டிக்காட்டிய பசு - புலி

தட்சிண கன்னடா மாவட்டம், சுள்ளியா டவுன் பஸ் நிலையத்தில் இருந்து அரை கி.மீ., துாரத்தில், 850 ஆண்டுகள் பழமையான சுள்ளியா சென்னகேசவா கோவில் அமைந்து உள்ளது.
துளு நாட்டை ஆண்டு வந்த பல்லால ராயா ராஜா, சுள்ளியாவில் கோவில் கட்ட தீர்மானித்தார். பன்னேபீடு அருகே ராஜ குடும்பத்தினர் தங்கியிருந்தனர். அப்போது, பசுவும், புலியும் ஒரே இடத்தில் நின்றிருப்பதை பார்த்தனர்.
கோவில் கட்ட இது தான் சரியான இடம் என்ப தை முடிவு செய்து, கோவில் கட்டினர். பஞ்சலோகத்திலான சென்னகேசவா சுவாமி விக்ரஹம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. மூன்று வேளையும் பூஜைகள் செய்யப்படுகின்றன.
இக்கோவிலின் வடகிழக்கு பகுதியில் துணை தெய்வங்களாக கருதப்படும் துர்கா பரமேஸ்வரி அம்மன், சென்னிகராய தேவிக்கும் சன்னிதியும் அமைந்து உள்ளது. கோவில் வெளிப்புறம் முற்றத்தில் ஆஞ்சநேயர் சன்னிதி அமைந்து உள்ளது. இங்கும் தினமும் சிறப்பு பூஜைகள், சேவைகள் நடத்தப்படுகின்றன.
இங்கிருந்து அரை கி.மீ., துாரத்தில், பகவதி அம்மன் கோவிலும் அமைந்து உள்ளது. ஆண்டுதோறும் ஜனவரி மாதத்தில் பத்து நாள் ரத மஹோத்சவம் நடக்கிறது. இவ்விழாவில் பங்கேற்க, மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வருகை தருவர்.
இந்நாளில், கோவில் உட்பிரகாரத்திற்குள் உற்சவர், பல்லக்கில் வைத்து வலம் வருவார். அதன்பின், கோவில் வெளியே உடுப்பியில் செதுக்கப்பட்ட ரதத்தில் வைத்து திருவீதி உலா வரும். அப்போது பக்தர்கள் 'கோவிந்தா, கோவிந்தா' என பக்தி பரவசத்துடன் கோஷம் எழுப்புவர்.
இக்கோவில் காலை 6:00 முதல் மதியம் 1:00 மணி வரையிலும்; மாலை 4:00 முதல் இரவு 8:30 மணி வரையிலும் திறந்திருக்கும்
- நமது நிருபர் - .