ஹூப்பள்ளி - ஜோக் நீர்வீழ்ச்சி சுற்றுலா பஸ் இனி ஞாயிற்று கிழமையும் புறப்படும்
ஹூப்பள்ளி: வடமேற்கு சாலை போக்குவரத்துக் கழகம் சார்பில் ஹூப்பள்ளியில் இருந்து ஜோக் நீர்வீழ்ச்சிக்கு ஞாயிற்றுக்கிழமையும் சுற்றுலா பஸ்கள் இயக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
என்.டபிள்யூ.கே.ஆர்.டி.சி., எனும் வடமேற்கு கர்நாடக சாலை போக்குவரத்துக் கழகம் சார்பில் பருவமழைக் காலத்தில், ஹூப்பள்ளியில் இருந்து ஷிவமொக்கா மாவட்டம், ஜோக் நீர்வீழ்ச்சிக்கு, ஹூப்பள்ளி நகரில் இருந்து ஒவ்வொரு சனிக்கிழமையும் பஸ்கள் இயக்கப்பட்டு வந்தன.
இந்த சுற்றுலா பேக்கேஜிற்கு பொது மக்களிடம் இருந்து வரவேற்பு அதிகரித்தது. ஞாயிற்றுக் கிழமையும் இத்திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும் என்று பல தரப்பிலும் இருந்தும் கோரிக்கை எழுந்தது.
இதையடுத்து, ஹூப்பள்ளி நகரில் இருந்து நேற்று முன்தினம் முதல் ஜோக் நீர்வீழ்ச்சிக்கு என்.டபிள்யூ.கே.ஆர்.டி.சி.,யின் ஒரு மல்டி ஆக்சைல் வால்வோ ஏசி, ஒரு ராஜஹம்சா சாதாரண பஸ், ஒரு விரைவு பஸ் இயக்க முடிவு செய்யப்பட்டது.
ஆனால், அதிகளவில் பொது மக்கள் முன்பதிவு செய்திருந்தால், கூடுதலாக இரண்டு பஸ்கள் இயக்கப்பட்டன.
வரும் நாட்களில் சுற்றுலா பயணியரின் ஆதரவு அதிகரித்தால், கூடுதல் பஸ்களை இயக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஹூப்பள்ளியில் இருந்து வால்வோ ஏசி பஸ்சில் ஒருவருக்கு 700 ரூபாயும்; ராஜஹம்சா பஸ்சில் 600 ரூபாயும்; விரைவு பஸ்சுக்கு 500 ரூபாயும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த பஸ்கள், சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை, விடுமுறை நாட்களில், ஹூப்பள்ளியில் இருந்து காலை 8:00 மணிக்கு புறப்படும்; இரவு 9:00 மணிக்கு மீண்டும் ஹூப்பள்ளி வந்தடையும்.
அரசு ஊழியர்கள், தனியார் ஊழியர்கள், நண்பர்கள், குடும்பத்துடன் செல்ல நினைப்போர், வால்வோ பஸ்சில் பயணம் செய்ய வேண்டுமென்றால், 45 பேரும்; விரைவு பஸ்சில் பயணிப்பாக இருந்தால் 35 பேருமாக முன்பதிவு செய்யலாம்.
மேலும் விபரங்களுக்கு 77609 91674, 77609 91682 என்ற மொபைல் போன் எண்ணிலோ, www.ksrtc.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.