'ராகிங்' பீதியால் கல்லுாரி மாணவர் தற்கொலை

மாதநாயகனஹள்ளி: கல்லுாரியில், 'ராகிங்' அச்சத்தால், மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.

கல்லுாரிகளில் ஜூனியர் மாணவ, மாணவியரை ராகிங் பெயரில், சீனியர் மாணவர்கள் பல விதங்களில் இம்சிப்பது, ஆங்காங்கே நடக்கிறது. ராகிங் கொடுமையால் மாணவர், மாணவியர் பாதிக்கப்படுகின்றனர். உயிரிழப்பு ஏற்பட்ட உதாரணங்களும் உள்ளன. மாநில அரசு பல நடவடிக்கைகள் எடுத்தும், இதை கட்டுப்படுத்த முடியவில்லை.

ஹாசன் நகரில் வசிப்பவர் சென்னகேசவா. இவரது மனைவி துளசி. இந்த தம்பதியின் மகன் அருண், 22, பெங்களூரில் தனியார் கல்லுாரி ஒன்றில், ஆர்க்கிடெக் படித்து வந்தார். நந்த ராமைய்யன பாளையாவில் வசித்தார். இவரை சீனியர் மாணவர்கள் ராகிங் செய்து தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதனால் மனம் நொந்த அருண்குமார், நேற்று காலை, 'செல்பி' வீடியோவில், நடந்த சம்பவங்களை விவரித்துவிட்டு, துாக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

தகவலறிந்து அங்கு வந்த மாதநாயகனஹள்ளி போலீசார், மாணவரின் உடலை மீட்டனர். வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.

Advertisement