'தினமலர்' நிறுவனருக்கு நினைவஞ்சலி தங்கவயல் தமிழ் சங்கத்தினர் புகழாரம்

தங்கவயல்: 'தமிழும், தமிழரும் உள்ள வரை தமிழுக்கு சேவை செய்யும், 'தினமலர்' நிறுவனர் ராமசுப்பையர் புகழ் மறையாது' என, தங்கவயல் தமிழ்ச் சங்கத்தில் நடந்த விழாவில் புகழாரம் சூட்டினர்.
தங்கவயல் தமிழ்ச் சங்கத்தில், ராமசுப்பையரின் 41வது ஆண்டு நினைவஞ்சலி நிகழ்ச்சி, தலைவர் சு.கலையரசன் தலைமையில் நேற்று நடந்தது. அவர் பேசியதாவது:
தமிழகத்தில், 'தினமலர்' இல்லாத இடமே கிடையாது. ஆளும் அரசுக்கு வழிகாட்டியாகவும், பாராட்ட வேண்டியதை பாராட்டியும், கண்டிக்க வேண்டியதை கண்டித்தும் எதிர்நீச்சல் போட்டு வருவது தான் தினமலர்.
தமிழகம் மட்டுமின்றி, உலகளவில் வாழும் தமிழர்களுக்கு உண்மையை உணர்த்துகிற, சமூக அக்கறையை காட்டும் காலத்தின் கண்ணாடி தான், 'தினமலர்' நாளிதழ். இதன் நிறுவனர் ராமசுப்பையர்,
பாரதியார் போல் குடுமி வைக்காத பகுத்தறிவு சிந்தனையாளர். கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்தவர். பெண்கள் உரிமைக்கு எழுத்துலகில் சாதித்தவர். இவரின் நினைவலைகள் தமிழும், தமிழரும் உள்ள வரை நிலைத்து நிற்கும். தங்கவயல் தமிழ்ச் சங்கமும் அவரை நினைத்து போற்றும்.
இவ்வாறு அவர் புகழாரம் சூட்டினார்.
தங்கவயல் நகராட்சி தலைவர் இந்திராகாந்தி, தங்கவயல் தாலுகா ம.ஜ.த., தலைவர் தயானந்தா, கோலார் மாவட்ட சாரணர் இயக்க இணை ஆணையர் ஆர்.பிரபுராம், தலித் ரக் ஷணா வேதிகே தலைவர் எஸ். அன்பரசன், இஸ்கான் கோவிலின் சுபானந்தா சுவாமிகள், தமிழ்ச் சங்க துணைத் தலைவர் தீபம் சுப்ரமணியம்.
செயல் தலைவர் கமல் முனிசாமி, பொருளாளர் வி.சி.நடராசன், இணைச் செயலர் திருமுருகன், ஆதிசக்தி மாரியம்மன் கோவில் அர்ச்சகர் பிரபு குருக்கள், பெமல் தமிழ்மன்ற முன்னாள் பொதுச் செயலர்கள் இருதயராஜ், சவுந்தர் ராஜன், முன்னாள் இணைச் செயலர் ரமேஷ் குமார்,
இந்திய கம்யூனிஸ்ட் கோலார் மாவட்ட செயலர் ஜோதிபாசு, ஸ்ரீ குமார், கருணாமூர்த்தி, தங்கவயல் தொகுதி அ.தி.மு.க., செயலர் பொன்.சந்திரசேகர், நகர பா.ஜ., செயலர் எம்.பாண்டியன், முன்னாள் ராணுவ வீரர் முருகன், ரவி, அம்பேத்கர் தேசிய மன்ற தலைவர் தாடி அன்பழகன் உட்பட பலர் மலர் துாவி வணங்கினர்.