பெங்.,ல் 11,000 மரங்களை வெட்டும் திட்டம் மெட்ரோவுக்கு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எதிர்ப்பு
பெங்களூரு: பெங்களூரில் மெட்ரோ ரயில் பணிக்காக 11,000த்துக்கும் மேற்பட்ட மரங்களை வெட்டுவதற்கு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
பெங்களூரு மெட்ரோ ரயில் மூன்றாம் கட்டப் பணிகள் விரைவில் துவங்க உள்ளன. ஜே.பி., நகர் நான்காம் கட்டத்திலிருந்து கெம்பே புரா வரையிலும்; ஹொசஹள்ளியிலிருந்து கடபகெரே வரையிலும் 44.6 கி.மீ., துாரத்துக்கு ரயில்வே பாதை அமைய உள்ளது. இதற்காக, நகரில் உள்ள 11,137 மரங்கள் வெட்ட மெட்ரோ ரயில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
வெட்டப்பட்ட மரங்களுக்கு பதிலாக வேறு பகுதிகளில் மரம் நடப்படும். இதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்வதாக மெட்ரோ நிர்வாகம் நேற்று முன்தினம் தெரிவித்தது.
இதுகுறித்து, சுற்றுச்சூழல் நிபுணர்கள், இயற்கை ஆர்வலர்கள், பொது மக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்படுகிறது. இக்கூட்டம் நேற்று துவங்கியது. இன்றும், நாளையும் தொடர்ந்து நடக்கும். கூட்டத்துக்கு பெங்களூரு மெட்ரோ பொது மேலாளர் ராகவன் தலைமை வகிக்கிறார்.
பொது மக்கள் தங்கள் கருத்துகளை, சாந்திநகர் பி.எம்.டி.சி., காம்பிளக்ஸில் உள்ள பெங்களூரு மெட்ரோ தலைமை அலுவலகத்தில் நேரடியாகவும், Contactus@bmrc.co.in என்ற மின்னஞ்சலிலும் அனுப்பலாம்.
இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, பெங்களூரை சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் அலெக்சாண்டர் ஜேம்ஸ் கூறியதாவது:
மரங்களை வெட்ட அனுமதிக்க மாட்டோம். வழித்தடத்தை மாற்றுவது குறித்து ஆலோசிக்க வேண்டும். இதுபோல, சில ஆண்டுகளுக்கு முன்பு, ஹலசூரு அருகே மெட்ரோ ரயில் திட்டம் கொண்டு வரப்பட்டபோது மரங்களை வெட்டுவது குறித்து அறிவிப்பு வெளியானது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்ததால், ஆயிரக்கணக்கிலான மரங்கள் காப்பாற்றப்பட்டன. வேறு வழியில் திட்டமிடப்பட்டது.
தற்போதைய திட்டத்தில் ஒரு கி.மீ., துாரத்துக்கு 250 மரங்கள் இருக்கிறதா என்பதே சந்தேகம். எனவே, அதிகாரிகள் மீண்டும் ஒரு முறை மறு ஆய்வு செய்து, திட்ட அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.