மிருதுஞ்செய சுவாமியை கொல்ல முயற்சி? பா.ஜ., - எம்.எல்.ஏ., அரவிந்த் பெல்லத் குற்றச்சாட்டு

பெங்களூரு: கூடலசங்கம பஞ்சமசாலி மடத்தின் ஜெய மிருதுஞ்செய சுவாமிகள், மடத்தின் டிரஸ்ட் தலைவரும், காங்கிரஸ் எம்.எல்.ஏ.,வுமான விஜயானந்த் காசப்பனவர் இடையிலான மோதல் முற்றுகிறது. இதற்கிடையே ஜெய மிருதுஞ்செயாவுக்கு, விஜயானந்த் காசப்பனவர் விஷம் கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பாகல்கோட் மாவட்டத்தில், கூடல சங்கம பஞ்சமசாலி மடம் உள்ளது. இதன் மடாதிபதியாக இருப்பவர் ஜெய மிருதுஞ்செய சுவாமிகள். அனைத்திந்திய லிங்காயத் பஞ்சமசாலி டிரஸ்ட் தலைவராக, காங்கிரஸ் எம்.எல்.ஏ., விஜயானந்த் காசப்பனவர் இருக்கிறார். சில ஆண்டுகளாகவே, இருவருக்கும் கருத்து வேறுபாடு நிலவுகிறது.

ஜெய மிருதுஞ்செயாவை மடாதிபதி பதவியில் இருந்து இறக்கி, வேறு மடாதிபதியை நியமிக்க, விஜயானந்த் காசப்பனவர் முயற்சிக்கிறார். சமீபத்தில் மடத்துக்கு பூட்டும் போட வைத்தார்.

மூன்று நாட்களுக்கு முன்பு, ஹூப்பள்ளியில் ஊடகத்தினர் முன்னிலையில், ஜெய மிருதுஞ்செய சுவாமிகள் மீது, பல குற்றச்சாட்டுகளை விஜயானந்த் சுமத்தினார்.

அவராகவே மடத்தை விட்டு வெளியேற வேண்டும் என, வலியுறுத்தினார்.

அதே நாளன்று, ஜெய மிருதுஞ்செய சுவாமிகளுக்கு உடல் நிலை பாதிப்பு ஏற்பட்டு, மருத்துவமனையில் சேர்ந்தார். இவரை விஷம் வைத்துக் கொலை செய்ய முயற்சி நடந்திருப்பதாக, குற்றச்சாட்டு எழுந்தது.

இதுகுறித்து, பா.ஜ., - எம்.எல்.ஏ., அரவிந்த் பெல்லத் கூறியதாவது:

தன்னை கொலை செய்ய முயற்சி நடப்பதாக, ஜெய மிருதுஞ்செய சுவாமிகள், என்னிடம் தெரிவித்தார். ஜூலை 19ம் தேதி அவரது உடல் நிலை பாதிக்கப்பட்டது.

அன்றைய தினம் இரண்டு முஸ்லிம் இளைஞர்கள், மடத்தின் சமையல் அறைக்கு சென்றுள்ளனர். இவர்களை பணிக்கு அமர்த்தியது விஜயானந்த் காசப்பனவர்.

இவர்கள் சமையல் அறைக்கு சென்று வந்த பின், சுவாமிகள் பிரசாதம் சாப்பிட்டுள்ளார். சிறிது நேரத்தில் அவருக்கு வாந்தி, வயிற்றுப் போக்கு உட்பட, பல விதமான உடல் நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே அவர் சாப்பிட்ட உணவில், விஷம் கலந்திருக்கலாம் என, அவர் சந்தேகிக்கிறார். இது பற்றி விசாரணை நடத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement