ஹெப்பால் சந்திப்பு பகுதியில்  மேம்பாட்டு பணிகள் ஆய்வு

பெங்களூரு: ''ஹெப்பால் சந்திப்பு பகுதி மேம்பாட்டுக்காக விரிவான திட்டத்தை உருவாக்கி, குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்க வேண்டும்,'' என, பெங்களூரு மாநகராட்சி தலைமை கமிஷனர் மஹேஸ்வர ராவ் உத்தரவிட்டுள்ளார்.

பெங்களூரு ஹெப்பால் சந்திப்பு பகுதியை நேற்று பெங்களூரு மாநகராட்சி தலைமை கமிஷனர் மஹேஸ்வர ராவ், பெங்களூரு போலீஸ் கமிஷனர் சீமந்த் குமார் சிங் மற்றும் பிற மாநகராட்சி அதிகாரிகள் சென்று ஆய்வு செய்தனர். இதையடுத்து, மஹேஸ்வர ராவ் மாநகராட்சி அதிகாரிகளுக்கு பல உத்தரவுகளை பிறப்பித்தார்.

ஹெப்பால் சந்திப்பில் மேம்பாலம் அமைக்கும் முதல் கட்ட பணிகள் நடக்கின்றன. இதன் மேம்பாட்டுக்கான வடிவமைப்பு, மேம்பாட்டு பணிகள் குறித்து திட்டத்தை உருவாக்க வேண்டும். இதை குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்க வேண்டும்.

இப்பணிகளால், நடைபாதைகளில் நடந்து செல்வோர் சிரமத்திற்கு ஆளாகின்றனர். முறையான நடைபாதைகளை அமைக்க வேண்டும். ஆங்காங்கே அறிவிப்பு பலகைகளை வைக்க வேண்டும். நாகவாரா சந்திப்பில் மெட்ரோ பணிகள் நடக்கின்றன. இங்கு மழை பெய்தால், தண்ணீர் அதிக அளவு தேங்குகிறது. இதை தடுக்க, வடிகால்களை துாய்மையாக பராமரிக்கவும். தண்ணீர் சீராக செல்வதை உறுதி செய்ய வேண்டும்.

கே.ஆர்., புரம் மெட்ரோ நிலைய பகுதியில், நடைபாதை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, சீரமைக்க வேண்டும். அசுத்தமாக உள்ள மேம்பாலத்தின் கீழ்ப்பகுதியை அழகுப்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement