ஜி.பி.ஏ.,க்கு எதிர்ப்பு அரசுக்கு நோட்டீஸ்
பெங்களூரு: கிரேட்டர் பெங்களூரு ஆணையம் அமைப்பதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனு தொடர்பாக பதில் அளிக்கும்படி, கர்நாடக அரசு, பெங்களூரு மாநகராட்சிக்கும், மாநில உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
பெங்களூரு மாநகராட்சியை ஐந்து மாநகராட்சிகளாக மாநில அரசு பிரித்துள்ளது. இதற்காக ஜி.பி.ஏ., எனும் கிரேட்டர் பெங்களூரு ஆணையம் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த ஆணையம் அமைத்ததற்கு எதிராக, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் திரைப்பட இயக்குநர் நாகபர்ணா உட்பட பலர் பொது நல மனுத் தாக்கல் செய்துள்ளனர். மனுவில் குறிப்பிட்டு உள்ளதாவது:
கிரேட்டர் பெங்களூரு ஆணையம் அமைத்தது, கிரேட்டர் பெங்களூரு நிர்வாக சட்டம், அரசியல் அமைப்பு 74வது திருத்தத்துக்கு முரணானது.
தற்போது மாநில அரசு, கிரேட்டர் பெங்களூரு ஆணையம் நிர்வாக சட்டத்தை அமல்படுத்துவதன் மூலம், அரசியல் அமைப்புக்கு எதிராக செயல்படுகிறது. அத்துடன், மாநகராட்சியின் நிர்வாகத்தை அரசு நேரடியாக கட்டுப்படுத்துகிறது.
உள்ளாட்சி அமைப்புக்கு இருந்த வரி விதிக்கும் அதிகாரம் என்ற அந்தஸ்தை, அரசு பறிக்கிறது.
இது உள்ளாட்சி அமைப்பின் நிதி சுதந்திரத்தை இழந்து, அதை பலவீனப்படுத்துவதற்கு வழிவகுக்கும். எனவே, கிரேட்டர் பெங்களூரு ஆணையத்தை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் குறிப்பிட்டிருந்தது.
இம்மனு, தலைமை நீதிபதி விபு பக்ரு, நீதிபதி ஜோஷி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அவர்கள், பொதுநல மனு தொடர்பாக விளக்கம் அளிக்கும்படி, மாநில அரசு, பெங்களூரு மாநகராட்சிக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.