பெங்களூரில் மூன்று சதவீத பசுமை விஞ்ஞானிகள் கடும் எச்சரிக்கை
பெங்களூரு: 'பெங்களூரில் மூன்று சதவீதம் மட்டுமே பசுமை உள்ளது. வரும் நாட்களில் அபாயம் காத்திருக்கிறது. இப்போதே விழித்துக் கொள்ள வேண்டும்' என, விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
பெங்களூரின் பசுமை குறித்து, ஐ.ஐ.எஸ்.சி., எனும் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் சைன்ஸ் விஞ்ஞானிகள் ஆய்வு செய்துள்ளனர்.
அவர்கள் வெளியிட்ட அறிக்கை:
பெங்களூரின் பசுமை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இதன் விளைவாக வரும் நாட்களில், பல விளைவுகளை சந்திக்க வேண்டி வரும். மக்கள் பாதிப்படைவர். 1970ல் நகரில் 70 சதவீதம் பசுமை இருந்தது. ஆனால், தற்போது மூன்று சதவீதமாக குறைந்துள்ளது.
ஆண்டுக்கு ஆண்டு வெப்ப நிலை மாறுகிறது. இனியாவது அரசு விழித்துக் கொண்டு, பெங்களூரில் பசுமையை அதிகரித்து, சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும். இல்லையென்றால் வரும் நாட்களில், அதிகமான பிரச்னையை சந்திக்க வேண்டி வரும்.
பசுமை குறைந்தால் காற்று மாசடையும். ஆழ்துளைக்கிணறுகள் வறண்டு போகும். நிலம் வறண்டு விடும். அப்போது பிராணி, பறவைகள் இருக்காது. வெப்பத்தீவாக மாறும். பெங்களூரில் வெப்ப நிலை 45 டிகிரி செல்சியஷை தாண்டும். இது மக்களின் ஆரோக்கியத்தில் பாதிப்பை ஏற்படுத்தும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.