பட்டபகலில் நகைக்கடையில் கொள்ளை அடித்த மூவர் கைது
கலபுரகி: பட்டபகலில் நகைக்கடை உரிமையாளர் தலையில் துப்பாக்கியை வைத்து மிரட்டி, மூன்று கிலோ தங்க நகைகளை கொள்ளை அடித்த மூவர் கைது செய்யப்பட்டனர்.
கலபுரகி நகர போலீஸ் கமிஷனர் சரணப்பா, நேற்று அளித்த பேட்டி:
கலபுரகி நகரின், சராப் பஜாரில் சப்காதுல்லா மல்லிக் என்பவர் தங்க நகைக்கடை வைத்துள்ளார். இம்மாதம் 11ம் தேதியன்று, பட்டப்பகலில் முகமூடி அணிந்த மர்ம கும்பல், கடைக்குள் புகுந்தது. உரிமையாளர் தலையில் துப்பாக்கியை வைத்து மிரட்டி, மூன்று கிலோ தங்க நகைகளை கொள்ளை அடித்து தப்பிச் சென்றது.
இதுதொடர்பாக விசாரணை நடத்திய போலீசார், மும்பையின் பிரசாத் சவுஹான், 48, டெய்லர் சோஹன்ஷேக், 30, மேற்கு வங்கத்தின் தங்க வியாபாரி பாருக் அகமது முல்லிக், 40, ஆகியோரை கைது செய்தனர். இவர்களிடம் இருந்து, 2.10 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள், 4.80 லட்சம் ரூபாய் ரொக்கம் மீட்கப்பட்டன.
கொள்ளையில் தொடர்புள்ள இருவர் தலைமறைவாக உள்ளனர். அவர்களை தேடி வருகிறோம். பாருக் அகமது முல்லிக், மூன்று ஆண்டுகளாக நகை வியாபாரம் செய்கிறார். வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டதால், 40 லட்சம் ரூபாய் வரை கடனாளியானார். இதை அடைக்க முடியாமல், இருவருடன் சேர்ந்து கொள்ளையில் இறங்கியதை விசாரணையில் ஒப்புக்கொண்டுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.