40 - 50 கி.மீ., வேகத்தில் காற்றுடன் கனமழை பெய்யும்

பெங்களூரு: 'கடலோர மாவட்டங்களில் இன்று முதல் வரும் 27ம் தேதி வரை, 40 முதல் 50 கி.மீ., வேகத்தில் பலத்த காற்றுடன், கனமழை பெய்யும்' என, கர்நாடக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

கர்நாடகாவில் கடந்த சில நாட்களாக கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. தட்சிண கன்னடா மாவட்டம் பன்ட்வாலில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் மழை வெள்ளம் புகுந்தது.

வீடுகள் அபாயம் நெடுஞ்சாலையில் பணிகள் அரைகுறையாக நடந்து வருவதால், மலையில் உள்ள வீடுகள் இடிந்து விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மங்களூரின் பம்ப்வெல் அருகில் உள்ள பகுதிகளில் வெள்ளம் தேங்கி நிற்கிறது.

சிக்கமகளூரு மாவட்டம், முடிகெரேயின் கங்கனமக்கி கிராமத்தில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில், இரண்டு பைக்குகள், ஒரு கார் சேதமடைந்தன. வீட்டில் இருந்த மூவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

ராய்ச்சூர் மாவட்டம், மான்வியின் அடவிகனாபூரில் ஓடை நிரம்பியதால், சாலைகளில் மழைநீர் ஓடுகிறது. இதனால் அவ்வழியாக வாகன போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

பயிர்கள் சேதம் யாத்கிர் மாவட்டம், வடகேரா தாலுகாவில் உள்ள குர்சனகி உட்பட பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் நெல், பருத்தி, சோளம், பயிர் வகைகள் என, நுாற்றுக்கணக்கான ஏக்கர் பயிர்கள் மழைநீரில் மூழ்கி உள்ளன. கனமழையால் ஷிவமொக்கா மாவட்டம், ஹொசநகரின் உள்ள அப்பி நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. ஆபத்தை உணராத சில சுற்றுலா பயணியர், நீர்வீழ்ச்சி அருகில் நின்று 'செல்பி' எடுத்துக் கொள்கின்றனர்.

நேற்று முன்தினம் 'செல்பி' எடுத்தபோது பெங்களூரை சேர்ந்த சுற்றுலா பயணி ரமேஷ், 45, வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டார். பாறைகளுக்கு அடியில் சிக்கியிருந்த, ரமேசின் உடலை தீயணைப்பு படையினர் மீட்டனர்.

பலத்த காற்று இந்நிலையில் வானிலை ஆய்வு மையம் வெளியிட்டு உள்ள அறிக்கை:

பாகல்கோட், விஜயபுரா, பல்லாரி, விஜயநகரா, பீதர், பெங்களூரு நகரம், பெங்களூரு ரூரல், கோலார், சிக்கபல்லாபூர், பெங்களூரு தெற்கு, சாம்ராஜ்நகர், கலபுரகி, யாத்கிர் மாவட்டங்களில் நேற்றிரவு 40 முதல் 50 கி.மீ., வேகத்தில் பலத்த காற்றுடன் கன மழை பெ ய்தது.

கடலோர மாவட்டமான தட்சிண கன்னடா, உடுப்பி, உத்தர கன்னடா மாவட்டங்களில், இன்று 30 முதல் 40 கி.மீ., வேகத்தில் பலத்த காற்றுடன் கனமழை பெய்யும்.

கர்நாடக வடக்கு மாவட்டங்களின் உட்பகுதிகளான பீதர், கலபுரகி, ராய்ச்சூர், யாத்கிர் மாவட்டங்களில், 40 முதல் 50 கி.மீ., பலத்த காற்றுடன் கனமழையும்; பாகல்கோட், பெலகாவி, தார்வாட், கதக், ஹாவேரி, கொப்பால், விஜயபுரா மாவட்டங்களில் காற்றுடன், லேசான மழை பெய்யும்.

இதுபோன்று இன்று முதல் 25ம் தேதி வரை கடலோரம், கர்நாடக வடக்கு மாவட்டங்கள் உட்பகுதியிலும்; தெற்கு மாவட்டங்களின் உட்பகுதியிலும் பலத்த காற்றுடன் கன மழை பெய்யும். 26, 27ம் தேதிகளில் மாநிலம் முழுதும் கன மழை பெய்யும். எனவே, மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம்.

இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளது.

Advertisement