தெருநாய்களுக்கு இருப்பிடம் பா.ஜ.,வின் ரமேஷ் வலியுறுத்தல்
பெங்களூரு: ''தெரு நாய்களுக்கு, இறைச்சி உணவு அளிப்பதற்கு பதிலாக, நிலையான இருப்பிடம் ஏற்படுத்தித் தரலாம்,'' என, பெங்களூரு மாநகராட்சியின் முன்னாள் ஆளுங்கட்சி பா.ஜ., தலைவர் ரமேஷ் தெரிவித்தார்.
இது குறித்து, நேற்று அவர் அளித்த பேட்டி:
பெங்களூரில் 5,000 தெரு நாய்களுக்கு, தினமும் இறைச்சி உணவு அளிக்க பெங்களூரு மாநகராட்சி முடிவு செய்துள்ளது. 2.80 கோடி ரூபாய் செலவில் டெண்டர் கோரியுள்ளதாக, மாநகராட்சியின் சுகாதாரப்பிரிவு சிறப்பு கமிஷனர் கூறியிருந்தார்.
வெறும் 5,000 நாய்களுக்கு மட்டும் உணவளிப்பது சரியா? மீதமுள்ள மூன்று லட்சம் தெரு நாய்கள், என்ன தவறு செய்தன? ஒரு வீட்டில் உள்ள அனைத்து உறுப்பினர்களுக்கும், ஒரே விதமான உணவு கொடுக்க வேண்டும். அதுதான் நியாயமானது. மாநகராட்சி வேடிக்கையான முடிவை கைவிட்டு, அனைத்து தெரு நாய்களுக்கும் நிலையான இருப்பிடத்தை ஏற்படுத்தி தர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.