செய்திகள் சில வரிகளில்
கர்நாடகாவில், கர்ப்பப்பை புற்றுநோய் ஏற்படுவதை தடுக்க, 14 வயதுக்கு உட்பட்ட சிறுமியருக்கு ஹெச்.பி.வி., தடுப்பூசி செலுத்த மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ளது. சுரங்கம் அருகில் வசிப்பவர்களுக்கே நோய் பாதிப்பு வாய்ப்பு உள்ளதால், துமகூரு, பல்லாரி, விஜயநகர், சித்ரதுர்கா ஆகிய மாவட்டங்களில் உள்ள 20 தாலுகாக்களில் உள்ள பெண்களுக்கு தடுப்பூசி செலுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக, 9 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
பெங்களூரு ஆர்.டி., நகரில் உள்ள ஹெச்.எம்.டி., மைதானத்தில் இன்றும், நாளையும் காலை 10:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை இ - பட்டா மேளா நடக்கிறது. இதில், ஹெப்பால் தொகுதி மக்கள், உரிய ஆவணங்களுடன் வந்து இ - பட்டாவை பெற்றுச் செல்லலாம் என மாநகராட்சி தெரிவித்துள்ளது. வருவாய் துறை அமைச்சர் கிருஷ்ணபைரே கவுடா துவக்கி வைக்கிறார்.
கலபுரகி, யாத்ராமியில் உள்ள கஸ்துாரிபா குடியிருப்பு பள்ளியின் தலைமை ஆசிரியை விஜயஸ்ரீ. இவர், பள்ளியில் வேலை செய்யும் ஊழியரை மிரட்டி, மசாஜ் செய்ய சொன்னார். இது வீடியோவாக இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், தலைமை ஆசிரியையை சஸ்பெண்ட் செய்யும்படி, பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
தேசிய மருத்துவ ஆணையத்தின் கீழ் செயல்படும், மருத்துவ மதிப்பீடு, மதிப்பீட்டு வாரியத்தின் தலைவர் பதவிக்கு, ராஜிவ் காந்தி சுகாதார பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தவரும், கர்நாடகாவை சேர்ந்தவருமான டாக்டர் எம்.கே.ரமேஷை நியமித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
பெங்களூரு ரூரல், நெலமங்களா தாலுகா, அரேபொம்மனஹள்ளி கிராமத்தின் தலைவர் ரங்கசாமி. இவரை, நேற்று கிராம பஞ்சாயத்து உறுப்பினர்கள் தாக்கியதாக, போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரில், 'பஞ்சாயத்து உறுப்பினர்கள் செய்த ஊழல்கள் எனக்கு தெரிய வந்ததும், அவர்களை தாக்கினர். நான் பட்டியல் ஜாதியை சேர்ந்தவன் என்பதால், தலைவர் பதவியை ராஜினாமா செய்யுமாறு கூறியும் தாக்கினர்' என தெரிவித்துள்ளார்.
கொப்பால், எல்புர்கா தாலுகாவை சேர்ந்தவர் பாரத் யட்டினமனே, 22. இவர், மாண்டியாவில் உள்ள மிம்ஸ் மருத்துவ கல்லுாரியில், முதலாம் ஆண்டு மருத்துவம் படித்து வந்தார். இவர், கல்லுாரி விடுதியில் தங்கி இருந்தார். நேற்று முன்தினம் தன் அறையில் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். மாண்டியா கிழக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.