தங்கள் வீட்டில் ஒருவராக என்னை தமிழக பெண்கள் நினைக்கின்றனர்: முதல்வர் மனைவி துர்கா பெருமிதம்
சென்னை: ''தமிழக பெண்கள், என்னை அவர்கள் வீட்டில் ஒருவராக நினைக்கின்றனர்,'' என, 'அவரும் நானும்' நுால் வெளியீட்டு விழாவில், முதல்வர் ஸ்டாலினின் மனைவி துர்கா பேசினார்.
துர்கா எழுதியுள்ள, 'அவரும் நானும்' நுாலின் இரண்டாம் பாகம் வெளியீட்டு விழா, சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நுாற்றாண்டு நுாலக அரங்கில் நேற்று நடந்தது.
எழுத்தாளர் சிவசங்கரி நுாலை வெளியிட, 'டபே' குழும இயக்குநர் மல்லிகா சீனிவாசன் முதல் பிரதியை பெற்றுக் கொண்டார்.
கோவை ஜி.ஆர்.ஜி., நிறுவனங்களின் தலைவர் நந்தினி ரங்கசாமியிடம் இருந்து, துர்காவின்
பேரன்கள் இன்பன், நலன், பேத்திகள் தன்மயா, நிலானி ஆகியோர், சிறப்பு பிரதிகளை பெற்றுக் கொண்டனர்.
விழாவில், நுாலாசிரியர் துர்கா பேசியதாவது:
'அவரும் நானும்' நுலை எழுத, என் கணவர் ஸ்டாலின்தான் காரணம். அவர்தான் என்னை உற்சாகப்படுத்தினார்.
இந்நுாலின் முதல் பாகத்திற்கு, 'தளபதியும் நானும்' என பெயரிட்டிருந்தோம். அதை, 'அவரும் நானும்' என ஸ்டாலின்தான் மாற்றினார்.
இந்நுாலில் என் பேரன், பேத்திகள் நான்கு பேரும், எங்களைப் பற்றி பகிர்ந்துள்ளனர். இதனால், இந்நுால் முழுமை அடைந்தது. ஒரு பாட்டியாக, இதில் எனக்கு அளவில்லாத மகிழ்ச்சி.
இந்நுாலில், எங்கள் இருவரைப் பற்றியும், எங்களது 50 ஆண்டு கால வாழ்க்கை பற்றியும் உணர்வுபூர்வமாக, என் பார்வையில் சொல்லிஇருக்கிறேன்.
முதல் பாகத்தை படித்தவர்கள், தொடர்ந்து எழுதுங்கள் என உற்சாகப்படுத்தினர். தமிழக பெண்கள் தான், என் நுாலின் பெரும்பான்மை வாசகர்கள். இதன் முதல் பாகம் வெளிவந்தபோது, தமிழக பெண்கள், என்னை அவர்கள் வீட்டில் ஒருவராக நினைத்தனர். என்னை மறுபடியும் எழுத துாண்டியதும் அவர்கள்தான்.
என் கணவர் ஸ்டாலின், எப்போதும் மக்களிடம், 'உங்களில் ஒருவன்தான் நான்' என்பார். அவரைப் பற்றி, அதே தலைப்பில் நுால் வெளியிட்டார். நானும் உங்களில் ஒருவராகவே இருக்க ஆசைப்படுகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.
எழுத்தாளர் சிவசங்கரி பேசியதாவது:
வாழ்க்கை வரலாற்று நுால் எழுதும்போது, மிகை யும் பொய்யும் இருக்கக் கூடாது என்பது இலக்கணம். அதற்கு எடுத்துக்காட்டாக இந்நுால் உள்ளது.
கணவன், மனைவி இருவருக்கும் மனஸ்தாபம் ஏற்படும்போது, யார் மீது தவறு உள்ளதோ, அவரே இறங்கி வந்து, மன்னிப்பு கேட்டு சமாதானப்படுத்துவதும், மனஸ்தாபத்தை சில மணித்துளிகளுக்கு மேல் நீடிக்க விடாததும் முதல்வர் ஸ்டாலின் மற்றும் துர்காவிடம் உள்ள நற்குணம். இதுபோல் நிறைய விஷயங்கள் இந்நுாலில் உள்ளன. இவ்வாறு அவர் பேசினார்.
துணை முதல்வர் உதயநிதி, மாசு கட்டுப்பாட்டு வாரிய மேல்முறையீட்டு ஆணைய தலைவரும், முன்னாள் நீதிபதியுமான பவானி சுப்ப ராயன், தி.மு.க., - எம்.பி., தமிழச்சி தங்க பாண்டியன், நுாலை பதிப்பித்த 'உயிர்மை' பதிப்பகத்தின் ஆசிரியர் மனுஷ்யபுத்திரன், பத்திரிகை யாளர் லோகநாயகி மற் றும் அமைச்சர்கள், எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் பங்கேற்றனர்.