துாண், பீம், தளத்தில் விரிசல் ஏற்பட்டால் கட்டுமான நிறுவனமே பொறுப்பு: ரியல் எஸ்டேட் ஆணையம்


சென்னை, : 'கட்டடங்களில் துாண், பீம், தளம் ஆகிய பாகங்களில், ஐந்து ஆண்டுகளுக்குள் விரிசல் ஏற்பட்டால், அதை சரி செய்வதற்கான பொறுப்பு கட்டுமான நிறுவனங்களுக்கே உள்ளது' என, ரியல் எஸ்டேட் ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர்.


வீடு, மனை விற்பனையில் ஏற்படும் பிரச்னைகளை தீர்க்க, ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம், மேல் முறையீட்டு தீர்ப்பாயம் உள்ளன. கட்டுமான நிறுவனங்கள் தங்கள் திட்டங்களை, இந்த ஆணையத்தில் பதிவு செய்ய வேண்டும்.




கட்டடத்தில் தரக் குறைவு, ஒப்படைப்பதில் தாமதம் போன்ற பிரச்னைகள் ஏற்பட்டால், ஆணையத்தில் புகார் அளிக்கலாம். ஆணையம் சார்பில் கட்டுமான நிறுவனங்கள், பொது மக்கள் பங்கேற்கும் கலந்தாலோசனை கூட்டம், சென்னையில் நேற்று நடந்தது.



இதில், இந்திய ரியல் எஸ்டேட் மேம்பாட்டாளர் சங்கங்களின் கூட்டமைப்பான கிரெடாய், இந்திய கட்டுமான வல்லுநர் சங்கம், தமிழக வீடு, அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவோர் சங்கங்களின் கூட்டமைப்பு உள்ளிட்ட அமைப்புகளின் நிர்வாகிகள், பொது மக்கள் பங்கேற்றனர்.



ரியல் எஸ்டேட் ஆணைய செயல்பாடுகள், கட்டுமான திட்ட பதிவு தொடர்பாக, பல்வேறு கேள்விகள் இதில் எழுப்பப்பட்டன.



இந்த கேள்விகளுக்கு, ரியல் எஸ்டேட் ஆணைய தலைவர் ஷிவ்தாஸ் மீனா, உறுப்பினர்
எல்.சுப்ரமணியன், கூடுதல் இயக்குநர் எஸ்.செல்வகுமார் ஆகியோர் பதில் அளித்தனர்.
கட்டுமான நிறுவனங்களின் வங்கிக் கணக்கு விபரங்களை இணையதளத்தில் வெளியிட, கட்டுமான துறையினர் ஆட்சேபம் தெரிவித்தனர். ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை சட்டப்படி, இந்த நடைமுறை கடைப்பிடிக்கப்படுவதாக, ஆணைய நிர்வாகிகள் விளக்கம் அளித்தனர்.


ஒரு கட்டுமான திட்டத்தை செயல்படுத்திய நிறுவனத்தை, எந்தெந்த விஷயங்களுக்கு பொறுப்பாக்க வேண்டும் என்பதை வரையறுக்க வலியுறுத்தப்பட்டது.




அதன் அடிப்படையில், 'கட்டடங்களில் துாண், பீம், தளம் ஆகிய, கட்டுமான பாகங்களில், ஐந்து ஆண்டுகளுக்குள் விரிசல் ஏற்பட்டால், அதை சரி செய்ய வேண்டியது, சம்பந்தப்பட்ட கட்டுமான நிறுவனத்தின் பொறுப்பு.



'ஒவ்வொரு கட்டடத்துக்கும் உத்தரவாத காலம், ஐந்து ஆண்டுகள் என்பதை, கட்டுமான நிறுவனங்கள் உணர்ந்து செயல்பட வேண்டும்' என்று, ஆணைய நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Advertisement