தொடக்கப்பள்ளிகளில் 3,201 தலைமையாசிரியர் பணியிடங்கள் காலி

2

கோவை: தமிழகம் முழுவதும் உள்ள தொடக்கப் பள்ளிகளில், 3,201 தலைமையாசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதால், கல்வி பணிகள் கடுமையாகப் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.


அரசு பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு, ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய போட்டித் தேர்வில் தகுதி பெற்ற 2,342 பேர் மதிப்பெண் அடிப்படையில் நியமனம் பெறவுள்ளனர்.


இந்த நியமனங்கள் ஒருபுறம் இருக்க, மறுபுறம் தலைமையாசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாதது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.




மாறுதல் குழப்பம் வழக்கமாக, தலைமையாசிரியர்களுக்கான மாறுதல் கலந்தாய்வு நடைபெற்ற பின்னரே, இடைநிலை ஆசிரியர் களுக்கான மாறுதல் கலந்தாய்வு நடைபெறும். ஆனால், இந்த ஆண்டு இதற்கு நேர்மாறாக, இடைநிலை ஆசிரியர்கள் பணி மாறுதல் கலந்தாய்வு நடைபெற்ற பிறகுதான், தலைமை ஆசிரியர்களுக்கான பணி மாறுதல் கலந்தாய்வு நடைபெறுகிறது.

இந்த நடைமுறை மாற்றத்தால், காலிப்பணியிடங்கள் முழுமையாக நிரப்பப்படாமல் போகும் நிலை ஏற்பட்டுள்ளது. இடைநிலை ஆசிரியர்களுக்குப் பதவி உயர்வு வழங்கிய பிறகு, மாறுதல் கலந்தாய்வு நடத்தியிருந்தாலும், பெரும்பாலான காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டிருக்கும்.




டெட் தேர்வு மற்றும் ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு தொடர்பான வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதே இதற்கு முக்கியக் காரணமாக கூறப்படுகிறது. நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகே தலைமையாசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட வாய்ப்புள்ளது.



அவ்வாறு தலைமையாசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும்போது, இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் காலியாகும் வாய்ப்புள்ளது. இதனால், கல்வி பணிகள் தொடர்ந்து பாதிக்கப்படும் சூழல் நீடித்து வருகிறது. ஆசிரியர்கள் கூறுகையில், 'தற்போது நடைபெற்ற கலந்தாய்வை மனதில் கொண்டு, எந்தெந்த பள்ளிகளில் காலிப்பணியிடங்கள் உருவாகியுள்ளன என்பதை அரசு முழுமையாக ஆராய்ந்து, குறிப்பாக, அந்த பள்ளிகளில் கல்வி பணிகள் பாதிக்கப்படாமல் இருக்க, முன்னுரிமை அடிப்படையில் புதிய இடைநிலை ஆசிரியர்களை நியமித்தால், கல்வி பணிகள் முழுமையாக பாதிக்கப்படாது' என்றனர்.

Advertisement