தி.மு.க.,வின் 'ஓரணியில் தமிழ்நாடு': மக்களுக்கு ஓ.டி.பி., அனுப்ப தடை உயர்நீதிமன்றம் உத்தரவு
மதுரை: மக்களிடம் தி.மு.க.,வினர் 'ஓரணியில் தமிழ்நாடு' என்ற பெயரில் ஆதார் உள்ளிட்ட விபரங்களை சேகரிக்க தடை கோரிய வழக்கில் ஓ.டி.பி.,எண் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக் கிளை இடைக்கால தடை விதித்தது.
சிவகங்கை மாவட்டம் அதிகரை ராஜ்குமார் தாக்கல் செய்த மனு:
தமிழகத்தில் ஆளுங்கட்சியான தி.மு.க., 'ஓரணியில் தமிழ்நாடு' என்ற பெயரில் உறுப்பினர் சேர்க்கை இயக்கம் நடத்துகிறது. தி.மு.க.,வினர் வீடுகள் தோறும் செல்கின்றனர். மக்களிடம் பல்வேறு ஆவணங்களை கேட்டு தொந்தரவு செய்கின்றனர். எங்கள் வீட்டிற்கு தி.மு.க.,வினர் சிலர் வந்தனர். எங்கள் அனுமதி இல்லாமல் வீட்டில் தமிழக முதல்வர் படத்துடன் 'ஓரணியில் தமிழ்நாடு' என அச்சிடப்பட்ட ஸ்டிக்கரை ஒட்டினர். குடும்ப உறுப்பினர்களின் ஆதார் எண், வாக்காளர் அடையாள அட்டை, வங்கி கணக்கு புத்தக நகல் மற்றும் பிற அடையாள அட்டைகளை கேட்டனர். தர மறுத்த போது, வீட்டு பெண்கள் மாதம்தோறும் அரசிடம் பெறும் ரூ.1000 உரிமைத் தொகையை நிறுத்திவிடுவதாக மிரட்டினர். அலைபேசி எண்களை கேட்டு வாங்குகின்றனர். எண் கொடுக்கப்பட்டதும் 'ஓரணியில் தமிழ்நாடு' என தகவல் வருகிறது. தொடர்ந்து ஓ.டி.பி.,வருகிறது. அதை தெரிவித்ததும் தி.மு.க.,வில் உறுப்பினராக சேர்ந்ததாக தகவல் வருகிறது. மக்களை தி.மு.க.,வில் சேருமாறு வற்புறுத்தி வருகின்றனர். தி.மு.க.,வில் சேராமல் போனால் தற்போது பெற்று வரும் அரசின் திட்டங்கள் நிறுத்தப்படும் என்கின்றனர்.
அரசியல் பிரசாரத்திற்காக ஆதார் போன்ற தனிப்பட்ட தகவல்களை பயன்படுத்துவது தவறு. தி.மு.க.வினர் மக்களின் ஆதார், ரேஷன் கார்டு, அலைபேசி எண் உள்ளிட்ட தனிப்பட்ட விபரங்களை கோருவது மக்களின் அடிப்படை உரிமைகள், தனிப்பட்ட சுதந்திரம், தனியுரிமையை மீறுவதாகும். அரசியல் பிரசாரத்திற்காக மக்களிடமிருந்து ஆதார் விபரங்களை சேகரிப்பது அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோதமானது. தி.மு.க.,வினர் மக்களிடமிருந்து எக்காரணத்திற்காகவும் ஆதார் விபரங்களை சேகரிக்கக் கூடாது. இதுவரை தி.மு.க.,வினர் சேகரித்த ஆதார் மற்றும் தனிப்பட்ட விபரங்களை அழிக்க வேண்டும். மக்களிடமிருந்து தி.மு.க.,வினர் சட்டவிரோதமாக ஆதார் விபரங்களை சேகரித்தது தொடர்பாக மத்திய அரசு மற்றும் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (யு.ஐ.டி.ஏ.ஐ.,) தலைமை செயல் அதிகாரி விசாரித்து தி.மு.க.,பொதுச்செயலாளர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஏ.டி.மரியா கிளீட் அமர்வு விசாரித்தது.
மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் கே.மகேந்திரன்: தி.மு.க.,வினர் வாக்காளர் பட்டியலுடன் வீடுகள் தோறும் வருகின்றனர். ஆதார், ரேஷன் கார்டு, அலைபேசி எண் உள்ளிட்ட விபரங்களை கேட்கின்றனர். விபரங்களை கொடுத்ததும் வாக்காளர் பட்டியலில் உள்ளதை சரிபார்த்து 'டிக்' செய்து கொள்கின்றனர். உறுதிப்படுத்த வரும் ஓ.டி.பி.,எண்ணை சேகரிக்கின்றனர். உறுப்பினர் ஆகவில்லை எனில் அரசின் சலுகைகள் கிடைக்காது என்கின்றனர். இது சட்டத்திற்கு புறம்பானது. இவ்வாறு கூறினார். தொடர்ந்து இவ்விவகாரம் தொடர்பான ஒரு வீடியோ பதிவும் சமர்ப்பிக்கப்பட்டது.
நீதிபதிகள்: ஓ.டி.பி., எண்ணை வெளியில் பகிர வேண்டாமென போலீசார் அறிவிப்பு செய்கின்றனர். இச்சூழலில் எதற்காக ஓ.டி.பி., கேட்கிறாரர்கள்.
அரசு தரப்பு: எவ்வித புகாரும் வரவில்லை. புகாருக்கு ஆதாரம் இல்லை. அரசியல் நாடகத்திற்காக இவ்வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நீதிபதிகள்: உறுப்பினர் சேர்க்கையை நடத்தலாம். தனது கட்சியின் உறுப்பினர் விபரங்களை சேகரிப்பதில் தவறில்லை. அவ்விபரங்கள் எவ்வாறு கையாளப்பட்டு, பாதுகாக்கப்படும், அகற்றப்படும் என்பது தொடர்பான எந்த திட்டமும் இல்லை. டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்பு (டி.பி.டி.பி.,) சட்டம் 2023 ல் கொண்டுவரப்பட்டது. வழிகாட்டுதல் எதுவும் உருவாக்கப்படவில்லை. ஓ.டி.பி.,ஐ பெறுவது, பாதுகாப்பது, பகிர்வது தொடர்பான வழிகாட்டுதலும் இல்லை. இந்திய தனித்துவ அடையாள ஆணையம் என்பது ஒரு தனிப்பட்ட அமைப்பு. அது மக்களின் தனிப்பட்ட விபரங்களை அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு விற்பனை செய்ய வாய்ப்புள்ளது. இது மிக ஆபத்தானது. இவ்வாறு விவாதம் நடந்தது.
நீ திபதிகள் பிறப்பித்த உத்தரவு: உறுப்பினர் சேர்க்கையில் தனிப்பட்ட தகவல்களை சேகரித்து பாதுகாப்பதற்கு என்னென்ன உள்கட்டமைப்புகள் உள்ளன என்பது தெளிவாகத் தெரியவில்லை. உச்சநீதிமன்றம் ஒரு வழக்கில் ,'வாக்காளர் கண்காணிப்பு மூலம் பெறப்பட்ட தகவல்களை தேர்தல் முறையின் அடித்தளத்தை செல்லாததாக்கப் பயன்படுத்தப்படலாம். தனியுரிமைக்கான உரிமையை அரசியலமைப்பு உத்தரவாதம் செய்கிறது,' என உத்தரவிட்டுள்ளது.
வாக்காளரை கண்காணிப்பதன் மூலம் அவர்களின் ஓட்டுரிமையை பறிக்க தனிப்பட்ட அரசியல் தொடர்பு பற்றிய தகவல்களை பயன்படுத்தலாம். சமீப காலமாக அரசியல் கட்சிகள் நடத்தும் டிஜிட்டல் உறுப்பினர் சேர்க்கை என்பது ஒரு புதிய ஆய்வு பகுதியாகும். தனிநபரின் விபரங்களானது தனியுரிமையில் அது ஏற்படுத்தும் தாக்கம் குறித்து இவ்வழக்கில் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. மக்களிடமிருந்து விபரங்களை சேகரிக்க, பாதுகாக்க, நடைமுறைப்படுத்த அரசியல் கட்சிகள் ஏற்றுக்கொள்ளும் வழிமுறைகள் மற்றும் உள்கட்டமைப்பு குறித்து தெளிவு தேவை.
இவ்வழக்கில் வீடுகள் தோறும் விபரம் சேகரித்து உறுப்பினர் சேர்க்கை நடக்கிறது. விபரம் எப்படி பாதுகாக்கப்படுகிறது, வாக்காளரின் தனியுரிமையில் ஏற்படுத்தும் தாக்கங்களை ஆராய வேண்டும்.
அரசியல் கட்சிகளால் நடத்தப்படும் இத்தகைய உறுப்பினர் சேர்க்கையில் எந்தவொரு கட்டாயம் அல்லது வற்புறுத்தலோ இருக்கக்கூடாது.
உறுப்பினர் சேர்க்கையில் சேகரிக்கப்படும் விபரங்களின் பாதுகாப்பை உறுதி செய்ய, தனிநபர்களிடமிருந்து ஒப்புதல் பெறப்படுகிறதா என்பதை தி.மு.க.,பொதுச் செயலாளர் உறுதிப்படுத்த வேண்டும்.தனியுரிமை மற்றும் விபரங்கள் பாதுகாப்பு தொடர்பான பிரச்னைகளை விரிவாக ஆராயப்படும் வரை, 'ஓரணியில் தமிழ்நாடு' இயக்கத்தில் ஓ.டி.பி.,சரிபார்ப்பு அனுப்புவதை தடுக்க இடைக்கால தடை விதிக்கப்படுகிறது.
டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் விதிகள் வகுக்கப்பட்டுள்ளன என மத்திய அரசின் துணை சொலிசிட்டர் ஜெனரல் கோவிந்தராஜன் தெரிவித்தார். இருப்பினும், அதை சரிபார்த்து பதிலளிக்க கால அவகாசம் கோரினார்.
மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை செயலர், இந்திய தனித்துவ அடையாள ஆணைய தலைமை செயல் அதிகாரி, தமிழக தலைமைச் செயலர், தி.மு.க.,பொதுச் செயலாளருக்கு நோட்டீஸ் அனுப்பப்படுகிறது. 2 வாரங்களில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்.
இவ்வாறு உத்தரவிட்டனர்.
மேலும்
-
ரஷ்யாவில் அடுத்தடுத்து 3 முறை நிலநடுக்கம்; ரிக்டரில் 6.4 ஆக பதிவு
-
தேனாம்பேட்டை அப்போலோ மருத்துவமனையில் முதல்வர் ஸ்டாலினுக்கு PET Scanning பரிசோதனை
-
ரூ.7 கோடி முதலீடு, ரூ.90 கோடி லாபம்; 2025ல் நாட்டிலேயே அதிக வசூல் படைத்த டூரிஸ்ட் பேமிலி
-
நாளைய மின்தடை
-
முத்து மாரியம்மன் கோவிலில் செடல் திருவிழா
-
சிறப்பு வழிபாடு