தனியாருடன் இணைந்து 'சோலார் பார்க்' ஆணையத்திடம் அனுமதி கேட்கும் வாரியம்

சென்னை: தனியாருடன் இணைந்து, திருவாரூர், கரூர் மாவட்டங்களில் தலா, 15 மெகா வாட் திறனில், சூரியசக்தி மின் நிலையங்கள் அமைக்க, தமிழக மின்சார ஒழுங்கு முறை ஆணையத்திடம், மின் வாரியம் அனுமதி கேட்டுள்ளது.
தமிழகத்தில் அடுத்த, 10 ஆண்டுகளில், 20,000 மெகா வாட் திறனில், சூரியசக்தி மின்சார பூங்கா மற்றும் 10,000 மெகா வாட்டில் மின்சாரத்தை சேமிக்கும், 'பேட்டரி ஸ்டோரேஜ்' கட்டமைப்பு வசதி ஏற்படுத்த, 2022 - 23ல் மின் வாரியம் முடிவு செய்தது.
முதல் கட்டமாக, அந்த ஆண்டில், 2,000 மெகா வாட் திறனில், சூரியசக்தி மின்சார பூங்கா அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக, திருவாரூர், காஞ்சிபுரம், கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில், 3,000 ஏக்கருக்கு மேல் இடம் கையகப்படுத்தப்பட்டது.
நீண்ட இடைவெளிக்கு பின், பி.பி.பி., எனப்படும் பொது - தனியார் கூட்டு முயற்சியில், திருவாரூர் மற்றும் கரூரில் தலா, 15 மெகா வாட் திறனில் சூரி யசக்தி மின் நிலையங்களை, பேட்டரி ஸ்டோரேஜ் கட்டமைப்பு வசதியுடன் அமைக்க, பசுமை எரிசக்தி கழகம் முடிவு செய்துள்ளது.
இத்திட்டத்தை செயல்படுத்த, தற்போது ஒழுங்குமுறை ஆணையத்திடம், பசுமை எரிசக்தி கழகம் அனுமதி கேட்டுள்ளது.
இதுகுறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:
ஆணையத்தின் அனுமதி கிடைத்ததும், சூரியசக்தி மின் நிலையம் அமைக்கும் கூட்டு நிறுவனத்தை தேர்வு செய்ய, 'டெண்டர்' கோரப்படும்; மின் நிலையம் அமைய உள்ள இடத்தை பசுமை எரிசக்தி கழகம் வழங்கும்.
அங்கு, தனியார் நிறுவனம் தன் செலவில் மின் நிலையங்களை அமைக்கும். அதனிடம் இருந்து, 25 ஆண்டு களுக்கு மின் வாரியம் மின்சாரம் கொள்முதல் செய்யும். இவ்வாறு அவர் கூறினார்.


