ரேஷன் பொருட்கள் வழங்கும் நேரம் 10 நிமிடமாக குறைப்பு

சென்னை: ரேஷன் கடைகளில் கார்டுதாரர்களுக்கு பொருட்கள் வழங்கும் நேரம், 10 நிமிடமாக குறைக்கப்பட்டுள்ளது.

தமிழக ரேஷன் கடைகளில், கார்டுதாரர் என்னென்ன பொருட்கள் வாங்குகிறாரோ, அவற்றை கடையில் உள்ள விற்பனை முனைய கருவியில் மொத்தமாக பதிவு செய்த பின், ஊழியர்கள் ஒவ்வொரு பொருளையும், தனித்தனியே எடை போட்டு வழங்குகின்றனர். இதனால், எடை குறைவாக வழங்குவதாக புகார்கள் எழுந்தன.

எனவே, சரியான எடையில் பொருட்கள் வழங்குவதை உறுதி செய்ய, மின்னணு எடை தராசை, விற்பனை முனைய கருவியுடன் இணைக்கும்படி, மாநில அரசுகளுக்கு, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, எடை தராசு மற்றும் விற்பனை முனைய கருவி, 'புளூடூத், ஆப்டிகல் கேபிள்' என, ஏதேனும் ஒன்றின் வாயிலாக இணைக்கப்படுகிறது.

இந்த முறையில் ஒவ்வொரு பொருளையும் எடை தராசில் வைத்து தான், 'பில்' போட வேண்டும். இதனால், ஒவ்வொரு பொருளுக்கும் தனித்தனியே 'பில்' போடப்படுவதால், ஒருவருக்கு பொருள் வழங்கவே 20 - 30 நிமிடங்கள் ஆகின்றன.

இதனால், பொருட்களை வாங்க கார்டுதாரர்கள் நீண்ட நேரம் காத்திருந்தனர். இதை சரி செய்யுமாறு, அரசுக்கு ஊழியர்கள் கோரிக்கை விடுத்தனர். எடை தராசு மற்றும் விற்பனை முனைய கருவியை இணைப்பதில் உள்ள தொழில்நுட்ப பிரச்னைகள் சரி செய்யப்பட்டன. இதனால், தற்போது ஒருவருக்கு பொருட்கள் வழங்கும் நேரம் 10 நிமிடங்களாக குறைந்துள்ளது.

தமிழகம் முழுதும் மொத்தமுள்ள 35,000 கூட்டுறவு ரேஷன் கடைகளில், தற்போது வரை 30,000 கடைகளில் இணைப்பு பணி முடிவடைந்துள்ளது.

Advertisement