ஜக்தீப் தன்கர் ராஜினாமா: நீதிபதி பதவி நீக்க தீர்மானம் காரணமா?

12


புதுடில்லி: பணமூட்டை விவகாரத்தில் சிக்கிய நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான பதவி நீக்க தீர்மானம் குறித்த விஷயத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, துணை ஜனாதிபதி பதவியில் இருந்து ஜக்தீப் தன்கர் ராஜினாமா செய்ததாக டில்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார். இதற்கு தனது உடல்நிலையை காரணம் கூறியிருந்தார். பார்லிமென்ட் மழைக்கால கூட்டத்தொடர் துவங்கிய முதல் நாளில் அவரது ராஜினாமா செய்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

உடல்நிலையை ஜக்தீப் தன்கர் காரணம் சொல்லியிருந்தாலும் அதனை ஏற்காத அரசியல் கட்சியினர் காரணங்களை கேட்டு அறிக்கை வெளியிடவும், பேட்டி கொடுக்கவும் துவங்கினர் .


இந்நிலையில், பணமூட்டை சர்ச்சையில் சிக்கிய ஐகோர்ட் நீதிபதி யஷ்வந்த் விவகாரம் காரணமாக ஜக்தீப் தன்கரும் பதவி விலக நேர்ந்ததாக தகவல்கள் கசிந்துள்ளன.


இது தொடர்பாக டில்லி வட்டாரங்கள் கூறியதாவது: நீதிபதி யஷ்வந்த் வர்மாவை பதவி நீக்கம் செய்ய பார்லிமென்டில் தீர்மானம் கொண்டு வரப்பட வேண்டும். இது தொடர்பாக டில்லியில் ராஜ்யசபா தலைவரும், துணை ஜனாதிபதியுமான ஜக்தீப் தன்கரை எதிர்க்கட்சித் தலைவர்கள் சந்தித்து பேசியிருந்தனர்.

அப்போது தீர்மமானத்தை அளித்தனர். இதனை அவரும் ஏற்றுக் கொண்டதாக தெரிகிறது. ஆனால், மத்திய அரசுக்கு இது குறித்து எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை. இதனால், துணை ஜனாதிபதிக்கும். அரசுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதன் பின்னரே ஜக்தீப் தன்கர் தனது பதவியை ராஜினாமா செய்து கடிதம் அளித்தார். இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

Advertisement