கன்வார் யாத்திரையில் 150 கி.மீ., துார பயணம்: கணவரை தோளில் சுமந்த நம்பிக்கை பெண்

ஹரித்வார்: உ.பி.,யை சேர்ந்த ஒரு பெண், கன்வார் யாத்திரையில், முடங்கிப்போன தனது கணவரை தோளில் சுமந்து 150 கி.மீ., துாரம் பயணம் செய்த சம்பவம் சமூக வலைதளத்தில் வைரல் ஆனது.
கன்வார் யாத்திரை தற்போது முழு வீச்சில் நடந்து வருகிறது. சிவபெருமானுக்கு பக்தி செலுத்தும் புனித சவான் மாதத்தில் மேற்கொள்ளப்படும் இந்த புனித யாத்திரையின் போது, ஆயிரக்கணக்கான கன்வாரியர்கள் புனித கங்கை நீரை எடுத்து மகாதேவருக்கு வழங்க நீண்ட தூரம் பயணம் செய்கிறார்கள்.
அப்படி பயணம் செய்த்வர்களில் உ.பி., மாநிலத்தின் மோடி நகரில் உள்ள பக்கர்வா கிராமத்தை சேர்ந்த ஆஷா என்ற பெண், தனது இரண்டு இளம் குழந்தைகளுடன், ஆஷா தனது கணவர் சச்சினை சுமந்துகொண்டு ஹரித்வாரில் இருந்து மோடிநகருக்கு கால்நடையாகப் பயணத்தைத் தொடங்கினார். கணவர் சச்சினுக்கு கடந்த ஆண்டு நடந்த முதுகுத் தண்டு அறுவை சிகிச்சைக்குப் பிறகு அவருக்கு இடுப்பு முதல் கீழ் வரை செயலிழந்து போனது.
இந்நிலையில் தனது கணவர் சச்சின் ஒரு நாள் மீண்டும் தன் காலில் நிற்க முடியும் என்ற நம்பிக்கையுடன், முடங்கிப்போயிருந்த கணவரை முதுகில் சுமந்து 150 கிலோமீட்டர் தூரம் பயணம் செய்தார்.
ஆஷா தனது கணவர் சச்சினை முதுகில் சுமந்து செல்லும் காட்சியை சிலர் வீடியோவாக எடுத்து சமூக ஊடங்கங்களில் பதிவிட்டனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி, பலரின் கவனத்தை ஈர்த்தது.
அந்த கணவர் அதிர்ஷ்டசாலி என்று பாராட்டிய நெட்டிசன்கள், அந்தப் பெண்ணின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பு மற்றும் பக்தியைப் பாராட்டி வருகின்றனர்.




