பெண்களுக்கு ஆடை கட்டுப்பாடு: தலிபான்களுக்கு ஐ.நா., கண்டனம்

நியூயார்க்: ஆப்கானிஸ்தானில், ஆடை கட்டுப்பாடுகளை மீறியதாக பெண்கள் மற்றும் சிறுமியரை தலிபான்கள் கைது செய்வதற்கு ஐ.நா., கண்டனம் தெரிவித்துள்ளது.

தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானில் இருந்து, அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகள் 2021ல் வெளியேறின. இதைத் தொடர்ந்து, தலிபான் பயங்கரவாத அமைப்பு, ஆப்கானிஸ்தான் நிர்வாகத்தை கைப்பற்றியது.

பெண்களுக்கு அங்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ஆறாம் வகுப்புக்கு மேல் கல்வி கற்கக்கூடாது, தங்களின் வீடுகளுக்கு வெளியே முகங்களை காட்டக் கூடாது, பொதுவெளியில் சத்தமாக பேசக்கூடாது என பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

தலை முதல் கால் வரை மறைக்கும் வகையில், பர்தா அணிய வேண்டும் என, தலிபான் அமைப்பு உத்தரவிட்டது. இந்த உத்தரவுகளை மீறியதாக, கடந்த 16 முதல் 19 வரை தீவிர நடவடிக்கை எடுத்தது. அதன்படி, ஏராளமான பெண்கள், சிறுமியர் கைது செய்யப்பட்டனர்.

இதற்கு, ஐ.நா., சபை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. 'இதுபோன்ற அடக்குமுறைகள், பெண்கள், சிறுமியர் மேலும் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளவும், தைரியம் இழந்தவர்களாக மாற்றும்' என, ஐ.நா., தெரிவித்துள்ளது. இந்த கட்டுப்பாடுகளை ரத்து செய்யும்படி, தலிபான் அரசை ஐ.நா., வலியுறுத்தி உள்ளது.

முன்னதாக இம்மாத துவக்கத்தில், சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் இது தொடர்பான வழக்கை விசாரித்தது. பெண்களுக்கு எதிரான நடவடிக்கைகளுக்காக, தலிபான் தலைவர் ஹிபதுல்லா அகுந்த்சாடா, ஆப்கானிஸ்தான் தலைமை நீதிபதி அப்துல் ஹக்கீம் ஹக்கானி ஆகியோருக்கு கைது வாரன்ட் பிறப்பித்தது.

Advertisement