காட்சிப்பொருளாக மாறிய குடிநீர் சுத்திகரிப்பு மையம்

திருப்பூர்; வாலிபாளையம், சடையப்பன் கோவில் அருகே, பல மாதங்களாக குடிநீர் சுத்திகரிப்பு மையம் செயல்படாமல் இருப்பதாக, அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

திருப்பூர் தெற்கு தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில், 2017 - 18ம் ஆண்டுகளில், பொதுமக்கள் பயன்பெறும் வகையில், குடிநீர் சுத்திகரிப்பு மையம் அமைக்கப்பட்டது. எம்.எல்.ஏ., தொகுதி வளர்ச்சியில், 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், நிலையம் அமைக்கப்பட்டது.

முதன்முதலாக, வாலிபாளையம் முத்தையன்கோவில் அருகே, குடிநீர் சுத்திகரிப்பு மையம் அமைக்கப்பட்டது. அந்தந்த பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு, வீடு தோறும், டோக்கன் வழங்கி; அதன் அடிப்படையில், சுத்தி கரிக்கப்பட்ட குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது; பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர்.

இந்நிலையில், கடந்த சில மாதங்களாக, குடிநீர் சுத்திகரிப்பு மையம் செயல்படாததால், பொதுமக்கள் கடும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில்,'மக்கள் பயன்பாட்டுக்காக, குடிநீர் சுத்திகரிப்பு மையம் இயங்கி வந்தது; பழுதாகிவிட்டது என்று கூறி, கடந்த சில மாதங்களாக குடிநீர் வழங்குவதில்லை. மாநகராட்சி அலுவலர்களிடம் கேட்டால், 'மாமன்றத்தில் தீர்மானம் வைத்துதான், பழுதுபார்க்க முடியும்' அதற்குள் எதுவும் செய்ய முடியாது' என்று கூறிவிட்டனர். மேயர் மற்றும் கமிஷனர் ஆகியோர், மக்களின் அவசர அவசியம் கருதி, முக்கிய பணிகளை தீர்மானம் இல்லாமலேயே செய்யலாம்; ஆனால், மாநகராட்சி அலுவலர்கள் பொதுமக்கள் நலனில் அக்கறையில்லாமல், பதில் அளிப்பது வருத்தமாக இருக்கிறது,' என்றனர்.

Advertisement