குடல் ஆரோக்கியத்தை கண்காணிக்கும் ஸ்மார்ட் மாத்திரை

அமெரிக்காவிலுள்ள கால்டெக் பல்கலை ஆராய்ச்சியாளர்கள், பில்ட்ரெக் (PillTrek) எனப்படும் விழுங்கக்கூடிய 'ஸ்மார்ட்' மாத்திரையை உருவாக்கியுள்ளனர். கிட்டத்தட்ட 7x25 மி.மீட்டர் அளவுள்ள இது, செரிமான மண்டலத்தில் பயணம் செய்து, பி.எச்., அளவு, வெப்பநிலை, குளுக்கோஸ், செரோடோனின் போன்ற நரம்பியல் கடத்திகள் மற்றும் புரதங்கள் ஆகியவற்றையும் நிகழ்நேரத்தில் அளவிடுகிறது.

மலம் அல்லது பயாப்ஸி பரிசோதனைகளை போலல்லாமல், இந்த ஊடுருவல் இல்லாத கருவி மூலம், மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணிக்கலாம். இது, ஆரம்ப கால நோயறிதல், வளர்சிதை மாற்றத்தை கண்காணிப்பது மற்றும் மனநல காரணிகளை நிர்வகிக்கவும் மருத்துவர்களுக்கு உதவும்.

இதற்கு குறைந்த மின்சக்தி போதும். நுணுக்கமான மின்னணுவியல் உணரிகளை உள்ளடக்கிய இந்த மாத்திரை, முப்பரிமாண அச்சியந்திரத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பில்ட்ரெக் மூலம் பல்வேறு உடல் அறிகுறிகளை சேகரிக்கும் பல்துறை உடல் நோயறியும் கருவியாக உருவெடுத்து இருக்கிறது.

ஏற்கனவே நடத்தப்பட்ட விலங்குகள் சோதனை, நல்ல பலன்களை தந்துள்ளதை அடுத்து, மனித சோதனைகளை செய்ய விஞ்ஞானிகள் தயாராகி வருகின்றனர். குடல் நோயறிதலை எளிதாகவும், மலிவாகவும் ஆக்கும் என, கால்டெக் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisement