தினமலர் செய்தி எதிரொலி கோயம்பேடு சந்தை சாலையில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்

கோயம்பேடு, கோயம்பேடு சந்தை சாலையில் இருந்த ஆக்கிரமிப்பு கடைகளை அங்காடி நிர்வாக குழு அதிகாரிகள் அப்புறப்படுத்தினர்.

கோயம்பேடு சந்தை, பூந்தமல்லி நெடுஞ்சாலை மற்றும் காளியம்மன் கோவில் தெரு ஆகிய பகுதிகளை இணைக்கும் முக்கிய சாலையாக, சந்தை சாலை உள்ளது. இச்சாலையில், ஆம்னி பேருந்து நிலையம், கோயம்பேடு காவல் நிலையம், சி.எம்.டி.ஏ., அலுவலகம் ஆகியவை அமைந்துள்ளன.

இச்சாலை வழியாக ஆம்னி பேருந்துகள், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து வரும் அரசு பேருந்துகள் என, தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. மெட்ரோ ரயில் பணி மற்றும் மழைநீர் வடிகால் பணியால் இச்சாலை குறுகலானது. மேலும் இச்சாலையில், தள்ளுவண்டி கடைகள் அதிகரித்துள்ளதால், நெரிசல் ஏற்பட்டு வருகிறது என, நம் நாளிதழில் நேற்று செய்தி வெளியானது. இதையடுத்து, அப்பகுதியை அங்காடி நிர்வாக குழு அதிகாரிகள் ஆய்வு செய்து, ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றினர்.

****













Advertisement