ராட்சத ஆமை மோதி படகு ஆடியதால் மீனவர்கள் அதிர்ச்சி

தொண்டி,:ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களின் படகில் 1500 கிலோ ஆமை மோதியதால் அதிர்ச்சியடைந்தனர்.

அரிய உயிரினமான ஆமைகள் இனப்பெருக்கத்திற்காக ஆழ்கடலில் இருந்து கடற்கரையை நோக்கி வருகின்றன. இவ்வாறு வரும் சிறிய வகை ஆமைகள் வலையில் சிக்குவதும், அவற்றை மீனவர்கள் மீட்டு மீண்டும் கடலில் விடுவதும் தொண்டி பகுதியில் வழக்கமாக நடந்து வருகிறது. இந்நிலையில் 1500 கிலோ எடை உள்ள ஒரு ஆமை படகில் மோதியதில் படகு ஆடியதால் மீனவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இதுகுறித்து எம்.ஆர்.பட்டினம் மீனவர்கள் கூறியதாவது: இரு நாட்களுக்கு முன் விசைப்படகில் நீண்ட துாரம் சென்று மீன்பிடித்துக் கொண்டிருந்ததோம். அப்போது 1500 கிலோ எடை கொண்ட ஒரு ஆமை படகில் மோதியது. படகு ஆடிய நிலையில் கவிழ்ந்து விடுமோ என்ற அச்சம் ஏற்பட்டது.

உடனடியாக சுதாரித்து அங்கிருந்து வேறு பகுதிக்கு சென்று மீன் பிடித்தோம். இதுவரை 50 முதல் 200 கிலோ ஆமைகள் சிக்கியுள்ளது. வலையை அறுத்து அவற்றை விடுவித்துள்ளோம். ஆனால் இவ்வளவு அதிக எடையுள்ள ஆமையை பார்த்தது இல்லை என்றனர்.

Advertisement