புதிய உத்தரவால் அத்துமீறும் வாகனங்கள் அண்ணா சாலையில் போலீசார் அதிருப்தி

சென்னை, சாலை விதிமீறல் தொடர்பாக குறிப்பிட்ட வழக்குகளை மட்டுமே பதிய வேண்டும் என கமிஷனர் உத்தரவிட்டு உள்ளதால், சாலையை ஆக்கிரமித்து நிறுத்தப்படும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாமல், அண்ணா சாலை போலீசார் அதிருப்தி அடைகின்றனர்.

சென்னையில், சாலை விதிமீறல் தொடர்பாக குறிப்பிட்ட சில வழக்குகளை தவிர மற்ற வழக்குகள் போடக்கூடாது என, சென்னை போலீஸ் கமிஷனர் அருண், போக்குவரத்து போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

இதை சாதகமாக பயன்படுத்தி கொள்ளும் வாகன ஓட்டிகள், 'நோ - பார்க்கிங்' மட்டுமின்றி பிரதான சாலைகள், மால்கள் அமைந்துள்ள பகுதியில், சாலையை ஆக்கிரமித்து தங்களது வாகனங்களை நிறுத்தி செல்கின்றனர். இதனால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுவததோடு, சிறு, சிறு வாகன விபத்துக்களும் நடக்கின்றன.

இதுகுறித்து, போக்குவரத்து உதவி ஆய்வாளர்கள் கூறியதாவது:

சென்னையில் தற்போது, இருசக்கர வாகனத்தில் மூன்று பேர் செல்வது, மது குடித்து வாகனம் ஓட்டுவோர், அதிவேகமாக வாகனம் ஓட்டுவோர் என, மூன்று வகையான விதிமீறலில் ஈடுபடுவோருக்கு மட்டுமே, பகலில் அபராதம் விதிக்கப்படுகிறது.

இரவு நேரங்களில், கூடுதலாக அதிக சத்தம் எழுப்பும் சைலன்சர் வாகனத்தை பயன்படுத்துவோர், வாகன எண் இல்லாமல் வாகனம் ஓட்டுவோர் மீது அபராதம் விதிக்கிறோம்.

இதை நன்கு அறிந்த வாகன ஓட்டிகள் போக்குவரத்திற்கு இடையூறாகவும், நடைபாதையை ஆக்கிரமித்தும், வாகனங்களை நிறுத்துகின்றனர்.

குறிப்பாக, ஸ்பென்சர் மால் வெளியே, விடுமுறை நாட்களில் அண்ணா சாலையை ஆக்கிரமித்து நுாற்றுக்கணக்கான வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன.

இந்த வாகனங்களை அப்புறப்படுத்த வேண்டும் என்றால், 'ரெக்கவரி' வாகனத்தை இயக்க வேண்டும். அவற்றை உபயோகப்படுத்தினால், சாலையில் அத்துமீறி நிறுத்தப்படும் வாகனங்களை, ரெக்கவரி வாகனத்தில் ஏற்றி இறக்குவோருக்கு, ஒரு வாகனத்திற்கு என குறிப்பிட்ட தொகையை கொடுக்க வேண்டும்.

தவிர, அத்துமீறும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்க, போலீஸ் கமிஷனர் அனுமதி அளிக்க வேண்டும். அண்ணா சாலையில் அனுமதி தராமல் மாம்பலம், பாண்டிபஜார் பகுதியில் மட்டும் ரெக்கவரி வாகனங்களை இயக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. அனைத்து காவல் நிலையங்களுக்கும் ஒரே மாதிரியான உத்தரவு வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement