எம்.பி.,க்கு எதிரான வழக்கு விபரம் கேட்கிறது கோர்ட்

சென்னை:திருநெல்வேலி எம்.பி., ராபர்ட் புரூஸ் வேட்புமனுவுடன் தாக்கல் செய்த சொத்து மற்றும் குற்ற வழக்குகள் விபரங்கள் குறித்த ஆவணங்களை தாக்கல் செய்ய, தேர்தல் கமிஷனுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த லோக்சபா தேர்தலில், திருநெல்வேலி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸ், பா.ஜ., வேட்பாளர் நயினார் நாகேந்திரன் ஆகியோர் போட்டியிட்டனர். இதில், தி.மு.க., கூட்டணியில் போட்டியிட்ட ராபர்ட் புரூஸ் வெற்றி பெற்றார். இவரது வெற்றியை எதிர்த்து, பா.ஜ., வேட்பாளர் நயினார் நாகேந்திரன், சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு, நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன், நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ராபர்ட் புரூஸ் தரப்பில், 'பார்லிமென்ட் தொடரில் பங்கேற்று வருவதால், பின்னர் ஆஜராகி சாட்சியம் அளிக்க அனுமதிக்க வேண்டும்' என, கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதையடுத்து, ராபர்ட் புரூஸ் தாக்கல் செய்த வேட்புமனுவுடன், சொத்து மற்றும் குற்ற வழக்கு விபரங்கள் குறித்த ஆவணங்களை தாக்கல் செய்ய, தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட்டு, வரும் 29ம் தேதிக்கு விசாரணையை, நீதிபதி தள்ளிவைத்தார்.

Advertisement