சதுரகிரியில் சிவராத்திரி வழிபாடு ஏராளமான பக்தர்கள் தரிசனம்

ஸ்ரீவில்லிபுத்துார்:சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் சிவராத்திரியை முன்னிட்டு நேற்று ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர். ஆடி அமாவாசையை முன்னிட்டு வெளி மாவட்ட பக்தர்கள் தாணிப்பாறை மலையடிவார தோப்புகளில் தங்கியுள்ளனர்.

இக்கோயிலில் நேற்று முன்தினம் ஆடி மாத பிரதோஷத்தை முன்னிட்டு ஏராளமானோர் தரிசனம் செய்தனர். 2ம் நாளான நேற்று சிவராத்திரி வழிபாட்டை முன்னிட்டு, காலை 6:00 மணி முதல் பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட்டனர். மதியம் 12:00 மணி வரை மலையேறினர். அதன் பின் வனத்துறை கேட் மூடப்பட்டதால் மலையேற அனுமதிக்கப்படவில்லை. மலையேறியோர் கோயிலில் மகாசிவராத்திரி வழிபாட்டில் சுந்தர மகாலிங்கம் கோயிலில் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர்.

இன்று ஆடி அமாவாசை வழிபாட்டை முன்னிட்டு சுவாமி தரிசனம் செய்வதற்காக நேற்று முதல் ஏராளமானோர் தாணிப்பாறை மலையடிவார தோப்புகளில் தங்க துவங்கி உள்ளனர். மதுரையில் இருந்து தாணிப்பாறைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டுள்ளது.

ஏற்பாடுகளை அறங்காவலர் ராஜா பெரியசாமி, செயல் அலுவலர் ராமகிருஷ்ணன் மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகள் செய்துள்ளனர். ஸ்ரீவில்லிபுத்துார் டி.எஸ்.பி. ராஜா தலைமையில் போலீசார் மலையடிவாரத்திலும், மதுரை மாவட்ட போலீசார் கோயில் வழித்தடப்பாதைகளிலும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மருத்துவம், சுகாதாரம், தீயணைப்பு துறை உட்பட அனைத்து அரசு துறை அதிகாரிகள் மலையடி வாரத்தில் உள்ளனர்.

Advertisement