எனது தவறு தான்…: எதைச் சொல்கிறார் ராகுல்

26


புதுடில்லி: '' சரியான நேரத்தில் ஜாதி வாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தாதது எனது தவறு தான்,'' என லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் கூறியுள்ளார்.


டில்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசியதாவது:நான் 2004 முதல் அரசியலில் உள்ளேன். நான் பின்னோக்கி பார்த்தால் நான் செய்த தவறு தெரிகிறது.நான் ஓபிசி பிரிவினரை பாதுகாக்கவில்லை. பாதுகாத்து இருக்க வேண்டும். உங்கள் பிரச்னைகளை சரியாக புரிந்து கொள்ள முடியாததே இதற்கு காரணம்.


ஓபிசி பிரிவினரின் பிரச்னைகள் தொடர்ந்து மறைக்கப்பட்டு வந்துள்ளது. இதனை எளிதாக பார்க்க முடியாது. ஓபிசி வரலாறு மற்றும் உங்கள் விவகாரங்களை முன் கூட்டியே தெரிந்து இருந்தால், இன்னும் தெரிந்து இருந்தால் சரியான நேரத்தில் ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தியிருப்பேன். இதனை வருத்தத்துடன் பதிவு செய்கிறேன்.


இந்த தவறை செய்தது நான். காங்கிரஸ் செய்த தவறு கிடையாது. எனது தவறு. அந்த தவறை சரி செய்யப்போகிறேன். ஒரு வகையில் தவறு நடந்தது நல்லதுதான். அந்த நேரத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தியிருந்தால், இப்போது நடப்பது போல் நடந்திருக்காது.


தெலுங்கானாவில் நாங்கள் செய்தது அரசியல் பூகம்பம். இது இந்திய அரசியல் களத்தில் அதிர்வை ஏற்படுத்தி உள்ளது. நீங்கள் இன்னும் அந்த அதிர்வை உணரவில்லை. ஆனால், பணிகள் நடந்துள்ளன. பெரிய சுனாமி உள்ளது. ஆனால், அந்த சுனாமியை உருவாக்கிய பூகம்பத்தை நீங்கள் இன்னும் பார்க்கவில்லை. அது இன்னும் கடலில் உள்ளது. அதன் தாக்கம் தெரிய 2 - 3 மணி நேரம் ஆகும். இதுதான் தெலுங்கானாவில் நடந்துள்ளது. இவ்வாறு ராகுல் பேசினார்.

Advertisement