பீஹாரில் பத்திரிகையாளர்களுக்கு ஜாக்பாட்: ஓய்வூதியம் ரூ.15 ஆயிரமாக உயர்வு

3


பாட்னா: பீஹாரில் பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியத்தை ரூ.6 ஆயிரத்தில் இருந்து ரூ.15 ஆயிரமாக உயர்த்தி அம்மாநில முதல்வர் நிதிஷ்குமார் அறிவித்துள்ளார்.


பீஹாரில் மொத்தம் உள்ள 243 சட்டசபை தொகுதிகளுக்கும் விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. போலி வாக்காளர்களை தடுக்கும் வகையில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த முகாமை தேர்தல் கமிஷன் மேற்கொண்டு வருகிறது.

ஆளும் தே.ஜ., கூட்டணி அரசு ஆட்சியை தக்க வைக்க முனைப்பு காட்டி வருகிறது. பீஹார் மாநில முதல்வர் நிதிஷ்குமார் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. இந்நிலையில், இன்று (ஜூலை 26) பத்திரிகையாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் வகையில் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.



இது குறித்து அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:பீஹார் பத்ரகார் சம்மான் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ், தகுதியுள்ள அனைத்து பத்திரிகையாளர்களுக்கும் மாதம் ரூ.6,000க்கு பதிலாக ரூ.15,000 ஓய்வூதியத் தொகை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.



ஓய்வூதியம் பெறும் பத்திரிகையாளர்கள் இறந்தால், அவர்களைச் சார்ந்திருக்கும் நபருக்கு (கணவன் (அ) மனைவி) வாழ்நாள் முழுவதும் மாதம் ரூ.3 ஆயிரத்திற்கு பதிலாக ரூ.10 ஆயிரம் ஓய்வூதியத் தொகை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஜனநாயகத்தில் பத்திரிகையாளர்களுக்கு முக்கிய பங்கு உண்டு.


ஜனநாயகத்தின் நான்காவது தூண் பத்திரிகையாளர்கள். அவர்களுக்கு சமூக வளர்ச்சியில் முக்கிய பங்கு உண்டு. பத்திரிகையாளர்கள் தங்கள் பத்திரிகை சேவையை பாரபட்சமின்றிச் செய்யவும், ஓய்வுக்குப் பிறகு மரியாதைக்குரிய முறையில் வாழவும், ஆரம்பத்தில் இருந்தே பத்திரிகையாளர்களின் வசதிகளை நாங்கள் கவனித்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement