ரூ.15 லட்சத்துக்கு குழந்தைகள் விற்பனை: பெண் இடைத்தரகர் கைது, வெளிவராத பின்னணி தகவல்கள்

8

சென்னை: சென்னையில் பச்சிளம் குழந்தைகளை ரூ.15 லட்சம் வரை விற்பனை செய்து வந்த கும்பலைச் சேர்ந்த வித்யா என்ற இளம்பெண் உள்ளிட்ட 3 பேரை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



இதுபற்றிய விவரம் வருமாறு:


சென்னை புழலில் வசித்து வருபவர் கார்த்திக் விவேகா. இவர் வட சென்னை மேற்கு மாவட்ட பா.ஜ.,பட்டியலின அணியின் தலைவராக இருந்து வருகிறார். இவருக்கு அறிமுகமான பெண் ஒருவர், கார்த்திக் விவேகாவை தொடர்பு கொண்டுள்ளார்.


தம்மிடம் செல்போனில் பேசிய ஒரு பெண், குழந்தை ஒன்று விற்பனைக்கு உள்ளதாக வித்யா என்ற பெண் தம்மை அணுகியதாகவும், விற்பனைக்கு தயாராக உள்ள குழந்தைகளின் வயது, போட்டோ, அரசு முத்திரையுடன் கூடிய பிறப்பு சான்றிதழ் உள்ளிட்டவற்றை விவரங்களை அனுப்பி யாரேனும் உள்ளனரா என்று கேட்டதாகவும் தெரிவித்துள்ளார்.


பணத்திற்காக குழந்தை விற்கப்படுகிறதோ என்ற ஐயம் எழவே, கார்த்திக் விவேகா போலீசாருக்கு இது பற்றிய தகவல்களையும், வித்யா செல்போனில் அனுப்பிய குழந்தை பற்றிய விவரங்களையும் பகிர்ந்தார். அவர் அளித்த தகவல்களை பெற்றுக் கொண்ட போலீசார் உடனடியாக களத்தில் இறங்கினர்.


தனிப்படை போலீசாரின் நடவடிக்கையின் எதிரொலியாக, வித்யா கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.


சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் குழந்தைகளை கடத்தி, குழந்தை இல்லாத தம்பதிகளிடம் ரூ.10 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை விற்றது தெரிய வந்தது.


மேலும், விற்பனைக்காக, ஓரகடம் பகுதியில் 2 குழந்தைகளை அடைத்து வைக்கப்பட்டு இருப்பதும் தெரிந்தது. இதையடுத்து, அதிரடியாக அந்த 2 குழந்தைகளையும் போலீசார் மீட்டனர்.


இந்த குழந்தை கடத்தல் மற்றும் விற்பனை என்பது சிறிய அளவிலான நெட்வெர்க் என்பதை ஊகித்த போலீசார், தொடர்ந்து வித்யாவிடம் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். அவருடன் கைது செய்யப்பட்ட ரதிதேவி, தீபா ஆகியோரிடமும் போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர்.


குழந்தை கடத்தல், விற்பனை என்பது சட்டப்படி குற்றம். ஆனால் சென்னை போன்ற பெருநகரத்தில் இதுபோன்ற குற்றச் செயல்கள் இன்னமும் தொடர்ந்து கொண்டு இருப்பது அதிர்ச்சியின் உச்ச ரகம். ஏதோ ஓரிரு வாரங்களாக நடந்து வரும் வியாபாரம் போன்று தெரியவில்லை. நிச்சயம் இதன் பின்னணியில் பெரும் அதிர்ச்சி தரும் விஷயங்கள் இருக்கலாம்.


எனவே போலீசார், குற்றத்தின் தன்மையை அறிந்து, உடனடியாக இதன் பின்னே இருந்து செயல்படும் கும்பலையும், எங்கெல்லாம் குழந்தைகள் விற்கப்பட்டுள்ளன என்பதை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி இருக்கின்றனர்.

Advertisement